கடந்த 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி ஸிம்ஹா நடித்த சூது கவ்வும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிறந்த டார்க் காமெடி படத்திற்கு உதாரணமாக இப்போது வரை இப்படம் பேசப்பட்டு வருகிறது.
பதினோரு வருடங்கள் கழித்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை SJ அர்ஜுன் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, ராதா ரவி, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இரண்டாம் பாகம் என்றால் பழைய படத்தின் கதையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் சூது கவ்வும் படத்தின் முதல் பாக காட்சிகளை அப்படியே வைத்திருக்கிறார்கள். இது ரீ மேக் படமா என்று கேட்டால் அதுவும் இல்லை என்பது போல் திரைக்கதை குழப்பமாகவே இருக்கிறது.
சூது கவ்வும் முதல் பாகத்தில் டார்க் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இந்த இரண்டாம் பாகத்தில் டார்க், லைட் என எந்த காமெடியும் ஒர்க் அவுட் ஆகவில்லை, ஒர்க் அவுட் ஆக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஸ்கிரிப்ட், நடிப்பு என்று எங்கேயும் நகைசுவையை கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ‘அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்சி சிவா’ மேடையில் பேசி காமெடி செய்வது போலவே படத்திலும் செய்திருக்கிறார் (அதுவே போதும் என்று நினைத்து விட்டார் போலும்… சினிமாவுக்கு இன்னும் வேணும் சார்).
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கற்பனையில் ஒரு பெண் வருவார். இந்த இரண்டாம் பாகத்திலும் சிவா கற்பனையில் ஒரு பெண் வருகிறார். இந்த பெண் வரும் காட்சிகளில் “நீ ஏம்மா நடுவுல வந்து தொந்தரவு பண்ற” என ரசிகர்கள் சொல்வதை கேட்க முடிந்தது.
படத்தில் கருணாகரனின் நடிப்பைத் தவிர யாரும் சரியாக தன்னுடைய வேலையை செய்யவில்லை என்றே சொல்லலாம்.
முதல் பாகம் பார்த்து ஆகா என்ற உங்களுக்கு இரண்டாம் பாகத்தை பார்த்தால் அடச்சீ என்றே தோணும்.









