மரியா – விமர்சனம்
இது முதலில் படமா,அல்லது வயசு பெண்களுக்கு பாடமா என்று தெரியாமல் வந்திருக்கும் படம் மரியா.இயற்கையாக மனிதருக்கு உருவாகும் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத மதம் ஒரு மதமே அல்ல என்ற கருத்தை வலியுறுத்துகிறாள் இந்த மரியா
நன் எனச்சொல்லப்படும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி தான் படத்தின் நாயகி. பசி, தாகம், தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருக்குள் எழுகிறது. அந்தக் காம இச்சையை பெரும்பாவம் என போதிக்கும் ஜீசஸை அவர் வெறுக்கும் நிலைக்குச் செல்கிறார். அதன்மூலம் அவரது அக/புற வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை. கிறிஸ்தவத்திற்கு எதிராக சாட்னிஷம் என ஒரு மதத்தைச் சொல்லி இக்கதையில் கூடுதலாக ஒரு புதுக்கதையும் உள்ளது
கோபம், இயலாமை, குற்றவுணர்ச்சி காமம் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தி தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார் நாயகி சாய்ஸ்ரீ. குறிப்பாக ஜீசஸின் போட்டோவைப் பார்த்து மனசாட்சியின் குரலை அவர் வெளிப்படுத்தும் காட்சி அட்டகாசம். பாலு மகேந்திரா காலத்தில் இவர் இளைஞியாக இருந்திருந்தால் அவரின் ஆஸ்தான கதாநாயகியாக மாறியிருப்பார். படத்தின் பிரதான கதாப்பாத்திரம் இவர் மட்டும் என்பதால் ஏனைய நடிகர்கள் எல்லோரும் சின்னதாக அட்டனென்ஸ் போடுகிறார்கள். பாவல் நவகீதன் ஒகே ரகம். அவர் கேரக்டரின் சுமை பெரிது. அவர் அதைத் தாங்குவதற்கு சற்றுச் சிரமப்படவே செய்கிறார்
பின்னணி இசை படத்தோடு பக்காவாக ஒன்றியுள்ளது ஒரு பாசிட்டிவ் அம்சம். ஒளிப்பதிவாளருக்கு லைட்டிங் பட்ஜெட் குறைவாகத் தான் புரொடக்சன் தரப்பிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் போல. நிறைய ஷாட்களுக்கு நிறைய்ய சிரமப்பட்டுள்ளார்
எதோ உணர்ச்சி வேகத்திலோ, அல்லது வற்புறுத்தலின் பேரிலோ கன்னியாஸ்திரி ஆகும் பெண்கள், அதிலிருந்து மீளவும் முடியாமல், அந்தச் சுமையோடு வாழவும் முடியாமல் திணறும் நிஜத்தை அச்சு அசலாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஹரி கே. சுதன். அதேநேரம் கிறிஸ்தவ மதத்தின் மீதுள்ள குறைபாடுகளை பதிவு செய்கிறேன் என்ற பெயரில் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில காட்சிகளை புகுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். மதத்தின் பெயரால் மனித உணர்வுகளை கொல்லும் சிந்தாத்தத்தை கேள்வி கேட்பதற்கு ஒரு படைப்பாளிக்கு முழு உரிமை உண்டு. அதேநேரம் அதில் விமர்சனம் தான் இருக்கணுமே ஒழிய வன்மம் இருக்கக் கூடாது. இப்படத்தில் வன்மச்சாயல் லைட் ஆக இருக்கிறது. மேலும் படமாக நிறைய இடங்களில் ஒரு டாகுமெண்ட்ரி Feel கொடுக்கிறது. முதல் பாதியில் இருந்த நேர்த்தி இரண்டாம் பாதியிலும் இருந்திருக்கலாம்.
நாம் அறியாத பழக்கப்படாத கதை ஒன்று படத்திலுள்ளது. அதற்காக ஒருமுறைப் பார்க்கலாம்.
மொத்தத்தில் இந்த மரியா வயசு பெண்களை கெடுக்கும் படம்.