• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வன்முறை இல்லாமல் படம் எடுக்க முடியாதா ? ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்பட விழாவில் வி.சி.க தலைவர் தொல் .திருமாவளவன் கேள்வி!

by Tamil2daynews
November 19, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வன்முறை இல்லாமல் படம் எடுக்க முடியாதா ? ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்பட விழாவில் வி.சி.க தலைவர் தொல் .திருமாவளவன் கேள்வி!

 

ஒயிட் ஸ்கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் V.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’.இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக வேலாராமமூர்த்தி நடித்துள்ளார்

ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.பாடல்களை நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் வெளியிட்டார்.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக் கொண்டார்.

விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் வி. ராஜா பேசும்போது,
“இந்த ‘நெல்லை பாய்ஸ்’ படத்தை நாங்கள் பல சிரமங்களுக்கும் பல போராட்டங்களுக்கும் இடையில் உருவாக்கி இருக்கிறோம்.இயக்குநர் கமல் ஜி படத்தைச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். இங்கே சிறப்பு விருந்தினராகப் பல்வேறு பணிகளுக்கு இடையே வந்து கலந்து கொண்டிருக்கும் தலைவர் திருமா அவர்களுக்கு நன்றி.

தாணு சார் அவர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் சிறுவனாக இருக்கும்போது என்னை அரவணைத்து, நான் செய்யும் தவறுகளைக் கண்டித்து, வழிநடத்தி என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார். நான் இங்கே நிற்கிறேன் என்றால் என்னை உருவாக்கி வழி நடத்திக் கொண்டிருக்கும் எனது குருநாதர் தயாரிப்பாளர் எஸ் தாணு அவர்கள்தான் காரணம் .

சிறிய படங்கள் தான் திரையரங்குகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.சிறிய படங்களுக்கு பாதுகாவலராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. பல்வேறு வேலைகளுக்கிடையே எதிர்பாராத வகையில் இங்கே வருகை தந்து என்னை மகிழ்ச்சிப்படுத்தியுள்ள தமிழ்க்குமரன் சார் அவர்களுக்கும் நன்றி.

அண்மையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத கே.ராஜன் அண்ணன் அவர்கள் எனக்காக வந்திருக்கிறார். அவர்களுக்கு மிக்க நன்றி.படத்தின் கதாநாயகன் அறிவழகன், கதாநாயகி ஹேமா ராஜ்குமார் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் .படத்திற்குப் பிறகு பேசப்படுவார்கள்.

இவ்விழா மூலமாக நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாம் இங்கே சினிமாவில் கதாநாயகர்களைக் கொண்டாடுகிறோம் இசையமைப்பாளரைக் கொண்டாடுகிறோம். அதே போல் தயாரிப்பாளரையும் கொண்டாட வேண்டும் .ஒரு தயாரிப்பாளராக 40 ஆண்டு காலம் வேரூன்றி இன்றளவும் நின்று சாதனை படைத்து உச்சம் தொட்டுள்ள கலைப்புலி எஸ் .தாணு அவர்களுக்கு விழா எடுக்க வேண்டும் ” என்றார்.

படத்தின் இயக்குநர் கமல் ஜி பேசும்போது,
” இந்த விழாவுக்கு வந்து பெருமைப்படுத்திய அனைத்து ஜாம்பவான்களுக்கும் நன்றி.இந்த படம் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த நட்பைப் பற்றிப் பேசுகிற படம். நட்பு மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நகரத்து நட்புக்கும் நெல்லை மாதிரியான பகுதியின் நட்புக்கும் என்ன மாதிரியான வேறுபாடு இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது படம்.நாயகன் அறிவழகன் சிறப்பாக நடித்துள்ளார்.நாயகி ஹேமா விடியற்காலை 5 மணி வரைக்கும் நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார் ” என்றார்.தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசும் போது,” இந்தத் தயாரிப்பாளர் ராஜா நான் பெறாத பிள்ளை. தைரியமானவன். தவறுகளைத் தட்டிக் கேட்பவன்.அவன் எடுத்திருக்கிற இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.மக்கள் சின்ன படம் ,பெரிய படம் என்று பார்ப்பதில்லை. அதில் கதை இருக்கிறதா அதை ஒழுங்காக எடுத்து இருக்கிறார்களா என்று மட்டும்தான் பார்க்கிறார்கள்.

போன ஓர் ஆண்டை எடுத்துக் கொண்டால் ஓடிய படங்கள் எல்லாம் சிறிய முதலீட்டுப் படங்கள் தான். சின்ன படங்கள் ஓடுகின்றன. மக்கள் நல்ல படங்களைப் பார்க்கின்றார்கள்.இன்று தமிழ் கலாச்சாரத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் படங்கள்தான் ஏராளம்.கஞ்சாக் கடத்தல், கொலை ,கொள்ளை இப்படித்தான் நிறைய படங்கள் வருகின்றன .ஒரு துப்பாக்கியில் 50 பேரை சுடுகிறான்.இப்படிச் செயற்கையாக எடுக்கிறார்கள் இயற்கையாகப் படம் எடுத்தால் தமிழ் மக்கள் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்.இந்த ‘நெல்லை பாய்ஸ்’ படமும் வெற்றி படமாக அமையும்”என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசும் போது,

” தம்பி ராஜா சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்டவன்.படத்தை ஆரம்பித்ததும் அவனிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன்.இந்தப் படத்தைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது .காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாகப் போகின்றன. பாடல்கள் பார்க்கும்போது செவி குளிர்ந்தது ;சிந்தை மகிழ்ந்தது.
தம்பி கமல் மிகச் சிறப்பாகப் படத்தை இயக்கியிருக்கிறார். இன்றைய திரை உலகுக்கு மிகவும் அவசியம் ஒரு கட்டுப்பாடு.எனக்குப் பாராட்டு விழா பிடிக்காது என்று இங்கே பேசிய ராஜனே கூறிவிட்டார். சூப்பர் ஸ்டார் அவர்கள் 50 ஆண்டுகள் முடித்து அவர் செய்த சாதனைகள் எண்ணற்றவை .அவரே தனக்குப் பாராட்டு விழா வேண்டாம் என்று கூறிவிட்டார் .அவரே அப்படிச் சொன்னபோது,எனக்கு மட்டும் பாராட்டு விழாவா? எனக்கு அது தேவையில்லை.நாம் மக்களின் நன்மைக்காக, சமூகத்திற்காக விழா எடுக்கலாம்.அதற்கு எழுச்சித்தமிழர் பக்க பலமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மனிதரை நாம் பெற்றது பெரும்பாக்கியம். அத்தனை சமுதாயத்திற்கும் சமத்துவத்திற்கும் சமதர்மத்துக்கும் ஓர் அடையாளம் தான் தொல் திருமாவளவன். அப்படிப்பட்ட மனிதரோடு நாம் பயணிப்பதில் மகிழ்ச்சி இந்தப் படம் மாபெரும் வெற்றி அடையும் “என்று கூறி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது,
“மிகவும் நேரம் கடந்து இந்த நிகழ்வை நாம் தொடங்கியிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் இங்கே பேசியிருக்கிறீர்கள். காலத்தாழ்வுக்கு நானும் ஒரு காரணம்.அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘நெல்லை பாய்ஸ் ‘என்கிற இந்தத் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா, அதிலே பங்கேற்க இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் இயக்குநர் கமல் அவர்களுக்கும் இந்தப் படத்தின் நாயகன் தம்பி அறிவழகன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.

இயக்குநரும் தயாரிப்பாளரும் அறிவழகனோடு வந்து இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என்று எனக்கு அழைத்து விடுத்தார்கள். பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையில் எனக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது .ஆனாலும் மறுதலிக்க இயலவில்லை. அதற்கு முக்கியமான காரணம்,இந்தப் படத்தின் நாயகன் தம்பி அறிவழகன்.என்னால் அன்போடு கென்னி என்று அழைக்கப்படக்கூடிய தம்பி, குழந்தையிலிருந்து என் மடியில் வளர்ந்த ஒரு பிள்ளை. நான் இதை எண்ணி பெருமைப்படுகிறேன் .

திரைப்படக் கதாநாயர்களைத் தொட்டுப் பார்த்தால் போதும் என்று நிலையிலிருந்த நான் இந்த நாயகனை, நானே மடியில் வளர்த்தேன் என்பது மகிழ்வைத் தருகிறது.கே.கே நகர் ஒட்டகப் பாளையத்தில் நான் ஒரு வாடகை வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தேன். அந்த வீடு அறிவழகனது பெற்றோர் ஒளிப்பதிவாளர் வில்லாளன் என்கிற சிகாமணியின் வீடு.அவர் யார் என்றால் ட்ரம்ஸ் சிவமணியின் மைத்துனர்.அந்த வீட்டில் நான் இருந்தபோது அறிவழகன் மூன்று வயதுக் குழந்தை.குழந்தைகள் என்றால் எனக்கு அப்படி ஒரு பிரியம் உண்டு. அதிலும் இவன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகிய ஒரு குழந்தை, கொழுகொழு என்று இருப்பான். நான் சுற்றுப்பயணம் முடித்து நள்ளிரவில் வந்தாலும் அவனைப் பார்க்காமல் விடமாட்டேன். காலையில் நிகழ்ச்சிகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு அவனைப் பார்த்து விட்டுத்தான் செல்வேன்.அப்படி அவன் மீது ஒரு பிரியம். அவனை நிறைய கிள்ளி வைத்திருக்கிறேன், கடித்து வைத்திருக்கிறேன். அப்படி இருந்த ஒரு பிள்ளை, இன்றைக்கு வளர்ந்து திரைப்படத்துறையில் ஒரு கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறான் என்பதை அறிந்து உள்ள படியே நான் பெரிதும் மகிழ்ந்தேன்.அவனைப் பார்க்கும் போதெல்லாம் படம் எப்போது வருகிறது என்று கேட்பேன்.சில படங்கள் எடுக்கப்பட்டாலும் திரைக்கே வராமல் போய்விடுகின்றன.
சிறு முதலீட்டுப் படங்கள் இப்படி பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. அவர்களால் பெரிய அளவிலே பிரமாண்டமான விளம்பரங்களைச் செய்ய முடியுவதில்லை. வெளியீட்டாளர்களும் – விநியோகஸ்தர்களும் அந்த அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வாங்க வருவதில்லை.

அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்றோ, அறிவழகன் நடித்த படம் திரைக்கு வராமல் போய்விடுமோ என்று கவலை எனக்கு இருந்தது.

போன வாரம் வந்து தயாரிப்பாளர் ராஜா,இயக்குநர் கமல் ஜி இருவரையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி, இந்த நிரிழ்ச்சிக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அறிவழகன் தன்னுடைய பெற்றோரோடு வந்து, என்னை அழைத்தபோது என்னால் மறுதலிக்க இயலவில்லை, மகிழ்ச்சி தாள வில்லை. கட்டாயம் நான் வருகிறேன், எவ்வளவு வேலையில் இருந்தாலும் வருகிறேன் என்று உறுதி அளித்தேன்.

கட்சி அலுவலகத்தில் 200 பேருக்கு மேல் இன்று திரண்டு இருந்தார்கள். ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆயிற்றே என்று ஐந்து மணிக்கே எனக்கு பதற்றம் வந்து விட்டது.ஆனாலும் என்னால் நேரத்திற்கு வர இயலாத அளவுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிறைய தோழர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு நான் இங்கே வந்து உங்கள் முன்னால் நிற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தம்பி அறிவழகனை நான் நெஞ்சார வாழ்த்துகிறேன். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் ராஜா,இயக்குநர் கமல் ஜி இருவரையும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.அறிவழகன் பிரபலமான குடும்பப் பின்னணியோ, ஏற்கெனவே பல படங்களில் நடித்துப் புகழடைந்தவரோ கிடையாது அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுத்த அவர்களை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. முழுமையாக நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை, தெரியவில்லை.

ஆனால் அந்தப் படத்தலைப்பின் எழுத்தைப் பார்த்ததும் நான் கேட்டேன், என்ன இந்த நெல்லையில் நிறைய அரிவாள்கள் இருக்கின்றன, கொடுவாள்கள் இருக்கின்றன.இந்த எழுத்தின் வடிவமைப்பிலேயே அரிவாள் இருக்கிறதே என்று கேட்டேன்.

நெல்லை என்றாலே அரிவாள் என்று சித்தரிக்கவேண்டும் என்று இல்லை. திரைப்படங்களில் எனக்கு நெடுநாளாக உள்ள ஒரு பெரிய கேள்வி. வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? என்ற கேள்வி. வன்முறைகளுக்கு முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் தராமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா என்ற கேள்வி.

திரைப்படங்களில் காட்டுவதைப் போல் உள்ள படியே மக்களிடம் வன்முறை கலாசாரம் இருக்கிறதா என்ற கேள்வி. இயக்குநர்கள் மாற்றிச் சிந்திக்கவேண்டும். ஒரு கதாநாயகன் என்றால் அவன் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்து துரத்துவான்.
பெரிய அளவில் தாதாயிசம் அல்லது ரவுடியிசம் இருந்தால்தான் அவன் ஹீரோ என்று கட்டாயமாக வலிந்து அதைக் காட்டித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி எனக்கு உண்டு.

நெல்லையில் எவ்வளவோ பேர் கல்விமான்கள், தொழிலதிபர்கள்,ஆய்வாளர்கள் இருந்திருக்கிறார்கள். நீதிபதிகள் தோன்றி இருக்கிறார்கள். இன்னும் பல் வேறு சிறப்புக்குரியவர்கள் இருக்கிறார்கள்.

தென்மாவட்டம் என்றாலே அரிவாள் கலாசாரம, நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிற போக்கு தொடர்ந்து இருக்கிறதே என்ற கவலை எனக்கு உண்டு.

இந்தப் படத்தை வைத்து நான் பேசுவதாகக் கருத வேண்டாம். பொதுவாகப் பேசுகிறேன். அதை நாம் நியாயப்படுத்துகிறோம், ‘காதலும் வீரமும் தமிழர் பண்பாடு ‘என்று. வீரம் என்பது வேறு. வன்முறை என்பது வேறு.நான் மதுரையிலே 90களின் தொடக்கத்தில் இந்த இயக்கப் பணிகளை ஆற்றியபோது, தோழர்களிடம் பேசுகிறபோது, வீரம் என்றால் அரிவாளைத் தூக்குவது என்று பொருள் அல்ல.

‘நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம் ‘என்று ஒரு முழக்கமே நான் எழுதினேன்.

‘நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம் ;நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறி மீறிப்பாய்தல் தீரம் ‘ என்று, வீரத்திற்கும் தீரத்திற்கும் நான் ஒரு முழக்கம் எழுதினேன்.

வீரம் ,தீரம் என்பது முரட்டுத்தனமாக செய்யப் படுவது என்று பொருள் அல்ல. அரிவாளைத் தூக்கி நோஞ்சான்களை வெட்டுவதுதான் வீரம் என்று பொருள் ஆகாது. ஆயுதம் தாங்கிய கும்பல் நிராயுதபாணிகளை வெட்டுவது வீரம் ஆகாது. பத்து பேர் சேர்ந்து பேருந்தில் வருகின்ற நிராயுதவாணிகளைச் சுற்றி வளைத்து அவர்களை வெட்டி வீழ்த்துவது வீரம் என்ற ஒரு பார்வை இங்கே இருக்கிறது.
அப்படி அல்ல.

நான் ஏற்றுக்கொண்ட, உள்வாங்கிக்கொண்ட கொள்கைக்கு நெருக்கடி வருகிறபோது அரசு தரப்பிலிருந்து வந்தாலும், பிற தரப்பிலிருந்து வந்தாலும் , காவல்துறை தந்தாலும் அல்லது மற்றவர்கள் தந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து ஒருபோதும் நான் வழுவமாட்டேன்; நழுவமாட்டேன்; சிறையில் அடைத்தாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன்; துப்பாக்கிச் சூட்டை நடத்தினாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன் என்று எதிர்த்து நிற்பதுதான் உண்மையான வீரம் . ஆனால் நாம் இங்கே வன்முறையை வீரமாகச் சித்தரிக்கிறோம்.

ரவுடியிசம் என்பது வேறு; ஹீரோயிசம் என்பது வேறு.ஆனால் இங்கே ரவுடியிசம் தான் ஹீரோயிசமாக மீண்டும் மீண்டும் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது.

‘புரட்சி என்பது வேறு ; வன்முறை என்பது வேறு’ என்று நான் ஒரு பாடலை ஒரு திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடலும் திரைப்படத்தில் வந்தது.புரட்சி என்பது கட்டாயம் ரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும் என்று இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் செய்தது ஆயுதம் இல்லாத புரட்சி.அவர் எந்த இடத்திலும் ஆயுதம் ஏந்துவோம் என்று சொல்லவில்லை . ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால் இன்றைக்கு இந்திய அரசியலில் விவாதங்களின் மையப் பொருளாய் இருப்பது அம்பேத்கரின் சிந்தனைகள் தான் .

அரசமைப்பு சட்டம் தான் இன்று இந்திய அரசியலின் மையப் பொருளாய் இருப்பது. நாம் இங்கே சமூக நீதி என்று பேசுகிறோம், அது அரசியல அமைப்பு சட்டத்தின் கோட்பாடுதான். இது மட்டுமல்ல சுதந்தரம், சமத்துவம்,மதச்சார்பின்மை, எல்லாமே அரசியலமைப்புச் சட்டம் முன்மொழிகிற கோட்பாடுகள்தான்.வன்முறையைக் கண்டு ஐயோ, இது பாவம், இது தவறு, இது அநீதி, இப்படிச் செய்யலாமா என்று பதறுகிற உள்ளம் போய் , இது எல்லாம் இயல்பானது, இது எல்லாம் நடக்கும், இவை எல்லாம் நடக்கத்தான் வேண்டும் என்று ஒரு பொது உளவியலை இத்தகைய காட்சிகள் கட்டமைக்கின்றன. வன்முறையை எதிர்மறை விமரசனம் இல்லாமல் அதைக் கடந்து போகும் நிலை உளவியலாகக் கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒரு காட்சியைத் திரும்பத் திரும்ப நாம் காட்டுகிறோமோ அந்தக் காட்சி இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது.எவ்வளவு பேரைக் தீ வைத்துக் கொளுத்தினாலும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ஏனென்றால் திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் பெண்களை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாலும் நாம் அப்படியே அதை வெறும் காட்சியாகப் பார்த்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம் ,அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறோம் .நம் மனம் பதறுவதில்லை . பட்டப் பகலில் மேலவலவில் ஏழு பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். திண்ணியத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வாயில் மலம் திணிக்கப்படுகிறது. அப்போதும் நாடு அமைதியாக இருந்தது.தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது இந்த சம்பவத்தை அறிந்து மூன்று நாள் உறங்கவில்லை என்றார்.

திரைப்படங்களில் காட்டுகிற இத்தகைய காட்சிகளைத்தான் தினந்தோறும் பார்க்கிறோம்.அதன் மூலம் ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது இரண்டு பேரை வெட்டிவிட்டார்களாம், பத்து பேரை வெட்டி விட்டார்களாம் என்று கேள்விப்படுகிறோம்.
அதைப்பற்றி நமக்கு பிரச்சினையே இருக்காது;கவலையே இருக்காது; பதற்றமே இருக்காது ;படபடப்பு இருக்காது ;பதைப்பு இருக்காது .அப்புறம் இப்படி நிகழ்ந்து கொண்டேதானே இருக்கும்? வீட்டுக்குள் புகுந்து ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான் கர்நாடகாவில் .
ஏன் என்றால் அவன் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். நாடு அமைதியாகவே இருக்கிறது. பதறவே இல்லை அந்தக் கவலையிலிருந்து நான் இதைச் சுட்டிக் காட்டிக்கொள்கிறேன்.

இந்த ‘நெல்லை பாய்ஸ்’ படத்தைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.சிறு முதலீடு என்றால் அது சிறு படம் என்று நாம் சொல்கிறோம். எந்தப் படமும் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை . முதலீடு தான் சிறிய முதலீடு, பெரிய முதலீடு . சிறு முதலீட்டுப் படங்கள் என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம்.சிறு படங்கள் என்று சொல்லக்கூடாது.

தயாரிப்பாளர்கள் நலிவடைந்து விடக்கூடாது; நட்டமடையக் கூடாது . அவர்களும் இங்கே பாதுகாப்பாகத் தொடர்ந்து இயங்க வேண்டும்.

படத்தை உருவாக்கும் இயக்குநர்கள் ஒரு முற்போக்கான பார்வை கொண்டு இருக்க வேண்டும். சாதி அமைப்பை நியாயப்படுத்துவது , சாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பது மதவாத அரசியலை நியாயப்படுத்துவது இவை எல்லாம் சமூகத்தின் நலன்களுக்கு உகந்தவையா என்ற சிந்தனை தேவை. பெரியார் அதற்காகத் தன் வாழ்க்கையை முழுமையாக ஒப்டைத்துக்கொண்டார் . 65 வயதிலே தன் வாழ்வையை முடித்துக்கொண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் .அல்லும் பகலும் படித்துப் படித்து, எழுதி எழுதி உறக்கமில்லாமல் அந்த வாழ்வை முடித்துக்கொண்டார் . அவர்களெல்லாம் இந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்பினார்களோ அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் பெரிதாக திரைப்படத்தில் பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு எதிரான காட்சிகளை அமைத்து ஓர் எதிரான போக்கைச் சமூகத்தில் வளர்த்து விடாமல் இருந்தாலே போதும்.

இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.இவர்கள் இளம் இயக்குநர், இளம் தயாரிப்பாளர் .இவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது.

ஆகவே இவர்கள் ஒரு முற்போக்கான பார்வை கொண்டவர்களாகப் பரிணமித்து வளர வேண்டும் வெல்ல வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன் நன்றி ” என்று கூறி வாழ்த்தினார்.

Previous Post

மெட்ராஸ் ஃமாபியா கம்பெனி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

கும்கி-2 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

கும்கி-2 - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • தாவூத் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் ஃமாபியா கம்பெனி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

November 19, 2025
அகண்டா 2: தாண்டவம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

November 19, 2025
‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

November 19, 2025
மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்  பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

November 19, 2025
ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

November 19, 2025

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!

November 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.