• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

by Tamil2daynews
September 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.

லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, ‘நிழல்கள்’ ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் – செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தினை ரசிகர்களிடம் சென்றடைவதற்காக விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர்‌ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சின்னி ஜெயந்த், கார்த்தி , எஸ்.ஜே.சூர்யா, நாசர், கவின், ரவி மோகன், நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், இயக்குநர்கள் பி. எஸ். மித்ரன், மோகன் ராஜா, தமிழ், சுந்தர் சி, ரத்ன குமார் இசையமைப்பாளர் சாம் சி எஸ் , படத்தொகுப்பாளர் விஜய் வேலு குட்டி சண்டை பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில்,*

” சர்தார் 2 எனும் மிகப்பெரிய திரைப்படத்தை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழி திருத்தேர் போல் இழுத்து வந்து ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இந்தப் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

இது எங்களுடைய கனவு படைப்பு. இந்த திரைப்படத்தை இந்த அளவிற்கான தரத்துடன் உருவாக்கியது என்னுடைய சீன பெருஞ்சுவரான கார்த்தி தான்.

இயக்குநர் மித்ரன் கதை சொல்லும் போது இதன் பிரம்மாண்டம் தெரிந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு அழகான கதை. இவ்வளவு பெரிய விசயத்தை சண்டை காட்சிகளுடன் மட்டுமல்லாமல் எமோஷன் உடனும் உருவாக்கியிருக்கிறார். செப்டம்பர் 10ஆம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தார் 2 வை ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
*நடிகர் சூர்யா பேசுகையில்,*

” சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இப்படத்தின் டீசரை பார்க்கும்போது இருட்டில் சண்டை நடக்கும். அதை பார்த்தவுடன் நெட்ஃபிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் ஃபிலிம் என்றுதான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் கார்த்தி உள்ளே வருகிறார். அதைப் பார்த்தவுடன், ‘ஹேய் நம்ம படமா இது..!’ என்ற எண்ணம் வந்தது. அதை ஆச்சரியமாக பார்த்தேன். அந்த டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வரப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தற்செயலாக அதை பார்த்த போது இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா ? மித்திரன் படமா இது? என்று எண்ணி வியந்தேன்.

டீசர் எப்படி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோ…! அதேபோல் இந்தப் படத்தின் டிரெய்லரும் எனக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் கொடுத்திருக்கிறது.

இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாக எடுத்துக்கொண்டு உருவான படம் இது. சர்தார் அப்படித்தான் 50 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் அது நடந்திருக்கிறது. நிகழ்த்தி காண்பித்திருக்கிறார்கள். அதிலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு கரு தான் இது.

நமக்குத் தெரியாத பல விசயங்கள் இருக்கிறது. அதை திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது. ஒரு ஸ்பை திரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை

இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர்- இயக்குநர்- இன்வெஸ்டிகேட்டட் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது.. அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்

சர்தாரில் மிகப்பெரிய விவாதத்திற்குரிய கருத்தை முன் வைத்தீர்கள். சர்தார் 2வில் நான் நிச்சயமாக அதைவிட மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் அபாரமான உழைப்பு தெரிகிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எழுத்தாளரும், படத்தொகுப்பாளரும் ஒன்றாக அமர்ந்து படத்தை தொகுத்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது.. ஆரோக்கியமான போக்காக இருக்கிறது.

என்னதான் கதை சிறப்பானதாக இருந்தாலும்.. அதனை ரசிகர்களிடத்திலும் பார்வையாளர்களிடத்திலும் கொண்டு செல்வது எஸ் ஜே சூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் தான். அதை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது.

ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால்.. அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம்.

கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது. எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால்… அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாக பார்க்கிறேன்.

கார்த்தியின் திரையுலக பயணத்தில் என்னை விட முக்கியமான படங்கள் நிறைய உள்ளது. அவரால் அதனை செய்ய முடிகிறது. அவரை ஒவ்வொரு படத்திலும் ரசித்தும் ஆச்சரியப்பட்டும், சந்தோஷமாகவும் நான் பார்க்கிறேன். அதில் ‘சர்தார்’- நான் மிக முக்கியமான படமாக பார்க்கிறேன்.

செப்டம்பர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் எல்லோரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தாரை பார்த்து கொண்டாடுவோம். அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைய உள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் நிச்சயமாக கார்த்திக்கு வேண்டும்.

தயாரிப்பாளர் லக்ஷ்மனும், கார்த்தியும் ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ். இந்த நேரத்தில் இவ்வளவு துணிச்சலுடன் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல், குறிப்பாக பட்ஜெட்டை பற்றி யோசிக்காமல்.. நல்லதொரு தரமான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் கடவுளின் ஆசீர்வாதத்தால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் வெளியாகி வெற்றியைப் பெற வேண்டும். இயக்குநர் மித்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
*இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசுகையில்,*

”நான் படத்தைப் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன். படம் தான் மக்களிடம் பேச வேண்டும். அதனால் படத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் இந்தப் படம் எப்படி உருவானது? என்பதை பற்றி பேச விரும்புகிறேன்.

இதற்கு முதலில் தயாரிப்பாளர் லட்சுமண் குமாரை பற்றி தான் சொல்ல வேண்டும். சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்பதை முதலில் அவர் தான் எங்களிடம் சொன்னார். அதனால் இது அவருடைய கனவு படம். அத்துடன் எனக்கு முழு நம்பிக்கையை அளித்து இதனை சிறப்பான படமாக உருவாக்குங்கள் என்றார். இதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு உள்ள பொருளாதார சூழலில் இது போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்க வேண்டும் என யோசிப்பது மிகப்பெரிய விசயம்.

நான் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தி உடனும் ஆறாண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தியை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் நான் ஒருவன் தான். அதனால் கார்த்தியை பற்றி பேசுவதற்கு என்னிடம் ஏராளமான விசயங்கள் உள்ளன.

‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஒரு விசயத்தை சொன்னேன். யார் ஒருவர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுகிறார்களோ..! அவர்கள் மிகச் சிறந்த இயக்குநராக உருவாகிவிடுவார்கள். உங்களுடைய, பொறுப்புணர்வை அவர் மேம்படுத்தி விடுவார். அதாவது ஒரு விசயம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் ..அது அவருக்கு போதாது. அப்போது அவர் இன்னும் சிறப்பாக செயல்படலாம் என்பார். அப்படித்தான் இந்த படம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்தத் திரைப்படம் இந்த அளவிற்கு தரத்துடன் உருவாகி இருப்பதற்கு கார்த்தியும் ஒரு காரணம். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மிக முக்கியமான காரணம்.

இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற மனநிலையுடன் தான் அவரை சந்திக்க சென்றேன். ஏனெனில் அவருடைய எதிர்பார்ப்பு என்ன? என்பது எனக்கு ஓரளவு தெரியும். அவரிடம் நான் இயக்குநராக கதை சொல்லவில்லை. எஸ்ஜே சூர்யாவாக மாறி அவரிடம் கதையைச் சொன்னேன்.

எந்தவொரு விசயத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எந்த விசயத்தை சொன்னாலும் அது ரசிகர்களுக்கு புரிய வேண்டும்… பிடிக்க வேண்டும்… என்பதற்காக கடுமையாக போராடுவார். அது சாதாரண விசயம் அல்ல. அவருக்கு இருக்கும் பரபரப்பில் எனக்கு வாட்ஸ் அப்பில் 17 நிமிசங்கள் பேசிய ஆடியோவை அனுப்புவார். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவிற்கு உருவானதற்கு எஸ் ஜே சூர்யாவின் உந்துதலும் ஒரு காரணம்.

சாம் சி எஸ் எப்போதும் எதற்காகவும் அசராத மனிதர். அவரை சந்தித்து எனக்கு இப்படி ஒரு விசயத்தை செய்து தாருங்கள் என்று சொன்னால் போதும். அதை ஒருபோதும் மறுக்கவே மாட்டார். அவரிடமிருந்து முடியாது என்ற வார்த்தை இதுவரை வந்ததே இல்லை. ‘ஓகே பிரதர் டோன்ட் வொர்ரி’ என்ற வார்த்தையை அதிகமாக சாம் சி எஸ் பேசித்தான் கேட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தின் கதையை நான் அவரிடம் விவரிக்கும் போது முழுவதுமாக கேட்டுவிட்டு, ‘பிரதர் இந்த கதையை படமாக எடுப்பதை விட சொன்னாலே ஹிட்டுதான்’ என்றார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் நூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டியால்தான் இயக்குநர்கள் அவரைத் தேடிச் செல்கிறார்கள். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் அவருக்கு எனர்ஜியை கொடுத்து, நூறு படங்களுக்கு இசையமைக்க வைத்திருக்கிறது. நூறு படங்கள் என்றால் நூறு படங்கள் மட்டுமல்ல .. அவை எண்ணூறு ரீல்கள். 800 ரீல்களுக்கு நீங்கள் இசை அமைத்திருக்கிறீர்கள் என்றால்… அது சாதாரணமான விசயம் அல்ல. அதனால் நீங்கள்தான் ரியல் இன்ஸ்பிரேஷன். சாம்பியன். சர்தார் படத்தின் தரத்திற்கு இவரும் ஒரு காரணம்.

ஆஷிகா ரங்கநாத்திடம் ஜென் ஸீ தலைமுறையை போல் நடிக்க வேண்டும் இன்று சொன்னேன். அதற்காக அவர்கள் உடையை தேர்வு செய்த பிறகு, ”ஃபர்ஸ்ட் நான் எனக்கு சௌகரியமான உடையில் நடிக்கிறேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆஷிகாவின் மிகப்பெரிய பலம் என்னவென்றால்.. அவர் தமிழ் வசனங்களை தமிழில் தான் பேசி பயிற்சி எடுத்து நடிப்பார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி.

குறிப்பாக கார்த்தியின் டபுள் ஆக்சன் வேடத்தை படமாக்கும் போது கார்த்தி விஜியாவும் நடிக்க வேண்டும். மேக்கப் செய்து கொண்டு சர்தாராகவும் நடிக்க வேண்டும். இவர்கள் இந்த இரண்டு கதாபாத்திரத்துடனும் ஆஷிகா ரங்கநாத் இருப்பார்கள். கார்த்தி மட்டுமல்ல ஆஷிகாவும் இரண்டு முறை நடிக்க வேண்டியது இருந்தது.

மாளவிகா நடித்த ‘தங்கலான்’ படத்தை பார்த்துவிட்டு, இவர்கள் பயங்கரமாக ஆக்ஷன் காட்சியில் நடிப்பார்கள் என நினைத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கலந்து கொள்ளும் முதல் நாள் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளை படம் பிடித்தேன். அவர் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நான் அவரிடம் ஆக்சன் காட்சிகள் குறித்து விவரித்தேன். 60.. 70 .. அடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும் என்றேன். அவர்கள் தயங்கினார்கள். அதன் பிறகு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இந்த படத்தைப் பொறுத்தவரை மூன்று ஸ்டேஜ்கள் இருக்கிறது படத்தை உருவாக்கும் ஸ்டேஜ். படத்தை படமாக்கும் ஸ்டேஜ். எடுத்த படத்தை நிறைவு செய்யும் ஸ்டேஜ். இந்த மூன்று ஸ்டேஜ்களிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் உள்ளரங்க காட்சிகள் அதிகம். அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்த கலை இயக்குநருக்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரை எடிட்டர் விஜய் வேலு குட்டியும், நடிகர் எஸ் ஜே சூர்யாவும் ஒரே மாதிரி தான் இருவருமே போதும் போதும் என்று சொன்னாலும் நான் வேறு வகையில் நடித்துக் காட்டுகிறேன் என்றும்… நான் வேறு விதமாக படத்தை தொகுத்து காட்டுகிறேன் என்றும்.. சொல்வார்கள். ” என்றார்.
*நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்,*

” நான் முதன்முதலாக சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோவில் பாடுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் ஏழு மணி நேரம் வரை காத்திருக்க செய்து, அதன் பிறகு எனக்கு குரல் வளம் இல்லை என்று நிராகரித்தார்கள். எனக்கு அப்போது இசை ஆர்வம் இருந்தது. ஆனால் பாட வேண்டும் என்று விரும்பினேன். அதன் பிறகும் தொடர்ந்து பல நிராகரிப்புகள்… அவமானங்கள்… தொடர்ந்தது.

நூறாவது படத்திற்கு இசையமைத்து, அதற்கான மேடையில் நான் நிற்கும் போது என்னுடைய இந்தப் பயணம் மிக நீண்டது. துயரம் மிகுந்தது. ஆனாலும் கடவுள் மற்றும் மக்களின் ஆதரவு இருந்ததால் இசையில் ஓரளவு குறிப்பிட்ட சாதனையை எட்டி இருப்பதாக நம்புகிறேன்.

என்னுடைய நூறாவது திரைப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. எனக்கு எப்போதும் அறிவாளியாய் உள்ள இயக்குநர்களிடம் பணியாற்றுவதற்கு ஆசையாக இருக்கும். அதிலும் இசை பற்றிய அறிவு அதிகம் உள்ள மித்திரன் போன்றவர்களிடம் பணியாற்றும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையில் ராகங்களை பற்றியும்.. இசை குறிப்புகளை பற்றியும் ..மித்திரனுக்கு நன்றாக தெரியும். இவரைப் போன்றவர்களை அசத்துவதற்காக இன்னும் ஏதாவது புதிதாக முயற்சிக்கலாம் என புதிதாக ஏதேனும் ஒன்றை செய்வேன். மித்திரன் என்னுடைய நண்பர். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருந்தது. நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மித்ரன்.

இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது இயக்குநரும், நானும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாக எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான உழைப்பை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.” என்றார்.

*நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில்,*

” திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு கூட்டு முயற்சியில் உருவாகும் கலை இது ஒன் மேன் ஷோ அல்ல.

இந்த சர்தார் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நடிகர் சூர்யாவிற்கு நன்றி.

சினிமாவை மிகவும் நேசிக்கும் மனிதர் இயக்குநர் மித்ரன். அவர் சர்தார் உலகத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் இதில் சொல்லி இருக்கும் கதை உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தில் எனக்கு அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாததாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு நுழைந்தவுடன் 150 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து ஆக்சன் சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. முதலில் தயங்கினேன். அதன் பிறகு ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பும், ஆதரவும் என்னை நடிக்கத் தூண்டியது. இதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு நன்றி. என்னுடைய எல்லைகளை வரையறுத்துக் கொண்டு நடித்தேன். அந்த எல்லைகளை மேலும் விரிவாக்கி வித்தியாசமான நடிப்பை என்னிடம் இருந்து பெற்றதற்காக இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் நன்றி.

சர்தார் 2 படத்தின் டீசரில் சாம் சிஎஸ்ஸின் இசை மிக சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சிகள் சாம் சி எஸ் இன் இசையால் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

சக நடிகரான கார்த்தி அற்புதமான மனிதர். எளிமையாக பழகக்கூடியவர். பெருந்தன்மையானவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன்” என்றார்.
*இந் நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில்,*

” தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா – தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

கனவுகளை காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றால்… அதற்கு இந்த கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால்… எங்களின் கனவு நனவாகி இருக்காது.

இந்தப் படத்தில் நான் ஏராளமான மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் யோகி பாபுவை ‘முருகா’ என்று தான் அழைப்பேன். அவரும் என்னை ‘முருகா முருகா’ என்றுதான் அழைப்பார். ஒரு காட்சியை அவரிடம் கொடுத்தால்… அந்த காட்சியை சிறப்பாக வடிவமைப்பதற்காக கடினமாக உழைக்கிறார். அதன் பிறகு அந்தக் காட்சி மிகச் சிறப்பானதாக மாறுகிறது. அவரிடம் எழுத்து திறமையும் இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இயக்குநர் நல்ல பெயரை பெற வேண்டும் என்ற மனசும் இருக்கிறது. இவ்வளவு விசயங்கள் அவரிடம் இருப்பதால்… அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் இருக்கிறது. அவருடைய கடுமையான உழைப்பை பார்த்து நான் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன்… அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள். அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து.. அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.‌இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, ‘அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல’ என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.

ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்த படம் சொல்லும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.

மித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால்… எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் ..அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்த படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்.

எந்த பின்புலமும் இல்லாமல் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது என்பது சாதனைதான். இன்னும் அவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு அற்புதமாக இசையமைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். சிலருக்கு வாழ்க்கை மிகப்பெரிய காத்திருப்பை வழங்குகிறது. ஆனால் வாய்ப்பை வழங்கும் போது மிகப்பெரிய அளவில் வழங்குகிறது. அதனால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தப் படத்தில் சில காட்சிகளை பார்க்கும் போதே நமக்குள் பயம் ஏற்படும். இது ரசிகர்களுக்கு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தி வித்தியாசமான அனுபவம் வழங்கும்.

தற்போது திருநெல்வேலியில் இருந்து ஒரு பிரஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் செய்யும் ஒவ்வொரு விசயமும் ஜாலியாகவும் இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டரை கேமரா முன்னால் 100% … மைக்கிற்கு முன்னால் 500% …கொண்டு வந்து விடுகிறார். அவருடைய உழைப்பு அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.அவருடைய வாழ்க்கைப் பயணம் தான் எல்லோருக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன். எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை வேண்டுமானால் இமிடெட் செய்யலாம். ஆனால் அவருடைய எனர்ஜியை ஒருபோதும் நகலெடுக்க முடியாது.

என் அப்பாவை பற்றி ஒரு விசயத்தை யோசித்து இருக்கிறேன். இதுவரை அப்பா எனக்காக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை. நானே கதையைக் கேட்டு அதை தேர்வு செய்து முட்டி மோதி வரட்டும் என்று விட்டுவிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் நம்மை வழி நடத்தவில்லை என்று யோசித்தேன். அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் கூட என்ன கதை… எங்கு படபிடிப்பு.. யார் இயக்குநர்.. என்று எந்த ஒரு விவரத்தையும் என்னிடம் கேட்டதில்லை. இதுவே எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரம் என நினைக்கிறேன்.

என் ரசிகர்களை கடந்த மூன்று வருடங்களாக ரொம்ப படுத்தி விட்டேன்.ஆனால் இந்த முறை ரசிகர்களாகிய உங்களுக்கு நான் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷமாக வந்து பார்த்து என்ஜாய் செய்யும் வகையிலான படமாக சர்தார் 2 இருக்கும். என்ன செய்தால் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும்… புரிய வேண்டும்… என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும். என்றார்.
Previous Post

ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

September 2, 2026

ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

September 2, 2026

அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

September 2, 2026

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் படப்பிடிப்பு தொடக்கம்

September 2, 2026

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

September 2, 2026

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

September 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.