மாய பிம்பம் – விமர்சனம்
90,95 காலகட்டத்தை நினைவுபடுத்தும் ஓர் அழகான படம் மாய பிம்பம்.
தன்னுடைய சினிமா காதலால் ஒரு கற்பனை காதலை படமாக்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இவர்.
18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த மாய பிம்பம் படத்தை இப்பொழுது முயற்சி செய்து வெளியிடுகிறார்.
ஒரு வேசி பெண்ணின் மகளும் எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு மருத்துவ மாணவரும் காதலிக்கிறார்கள் அந்தக் காதல் என்ன ஆனது நிறைவேறியதா, நிறைவேறவில்லையா என்பதை அழகாக படமாக்கி இருக்கிறார். ஒரு தலை ராகம் காலம் படமாக இருந்தாலும்,ஒரு சில காட்சிகள் நெஞ்சை தொடுவது போல் இயக்கியிருக்கிறார், சுரேந்தர்.

காதலர்களாக ஜானகி, ஆகாஷ் நடித்திருக்கிறார்கள். உண்மையான காதலர்களாகவே வாழ்கிறார்கள், படத்தில்.
ஜானகி என்றொரு பெண் நடித்திருக்கிறார் கருப்பாக இருந்தாலும் அழகாக அந்த காலத்து சரிதா போல் களையாக இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார் .அதுவும் அந்த இறுதிக் காட்சியில் கண்ணிமைக்காமல் ஜடம் போல் கிடப்பது பாராட்டுக்குரியது.
என்ன, 18 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த அழகி இப்பொழுது,எப்படி இருப்பாரோ தெரியவில்லை .பாவம், படம் அப்பொழுது வெளிவந்திருந்தால் இந்நேரம் இவர் நயன்தாரா போல் ஒரு பெரிய கதாநாயகியாக வலம் வந்திருப்பார். லேட்டாக படம் வெளிவருவதால் அவருடைய நிஜ கேரியர் க்ளைமாக்ஸ் போலவே ஆகி விட்டது. இதற்கு காரணமான டைரக்டருக்கு என்ன தண்டனை கொடுப்பது மை லார்ட் 
மருத்துவ மாணவனாக ஆகாஷ். ஜானகியை காதலித்து இறுதிக் கட்சியில் அழுது புரண்டு கருணை கொலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் போது தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தப் படத்தின் முதுகெலும்பு ஒளிப்பதிவாளர். அந்த காலத்து பிரபல கேமரா மேன் லோகநாத், நிவாஸ் மாதிரி காட்சிகளை லட்டு லட்டாக எடுத்து படத்தோடு நம்மை ஒன்ற வைத்து இருக்கிறார்.இசை அமைப்பாளர் பணியும் சோடை போகவில்லை.
என்ன நடக்கப் போகிறது என்பது முன்பே தெரிந்தாலும் சில காட்சிகள் மனதை கசக்கி பிழிவதை மறுப்பதற்கு இல்லை.இயக்குனர் தனது திறமையை வெளிப்படுத்த கடுமையாக உழைத்து இருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. மணிரத்தினம் வரிசையில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இப்படி ஒரு முயற்சியை செய்த கே ஜே சுரேந்தரை பாராட்டுவோம் .
அதற்காக படத்தை பார்ப்போம். மொத்தத்தில் மாய பிம்பம் அனைவரையும் கவரும் இன்பம்.








