‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ் சபரி ‘பிக் பாஸ்’ புகழ் ரட்சிதா நடித்திருக்கும் படம்.
ஹாரர் திரில்லர் அமானுஷ்ய சக்திகளை கொண்ட தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் இது சற்று கதைக்களம் வித்தியாசமாக வந்திருக்கும் படம் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தில் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தன் காதல் கணவன் சபரியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அங்கே இன்னொரு பிளாட்டில் வசிக்கும் ஸ்வேதா அவருக்கு முதல் தோழியாக அறிமுகமாகிறார்.
சம்பந்தம் இல்லாமல் ஒரு கிழவியும், சித்தர் போன்று ஒருவரும் அந்தக் கட்டடத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வாழ்ந்து வருகிறார்கள்.
கடைசியில் பார்த்தால் ரக்ஷிதாவை சந்தித்த ஸ்வேதா பிளாட்டில் யாருமே குடியிருக்கவில்லை என்பது தெரிகிறது.
சரி… இதிலென்ன வித்தியாசம் என்கிறீர்களா..? அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வரும் ஆத்மா நல்ல ஆத்மா என்பதுதான்.
அந்த ஆத்மா யாருடையது, அது ஏன் ரக்ஷிதாவை தோழியாக கொண்டது, கடைசியில் அது தன் பழியை தீர்த்துக் கொண்டதா என்பதெல்லாம் மீதிக் கதையில்.
அவரைவிட அற்புதமான பாத்திரம் ஸ்வேதாவுக்கு. புத்தரின் சக்தி பெற்ற அன்பு குழந்தையாக எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வாழும் அந்த பாத்திரத்தை ரசிக்கலாம். தன் சாவுக்கே காரணமான கணவனை பழி தீர்க்க வேண்டாம் என்று தன் தந்தையிடம் கேட்டுக் கொள்வதில் அவரது பொன்னான மனம் புரிகிறது.
பால்ய பருவத்தில் நடித்திருக்கும் சிறுமி கனிஷ்கா தெய்வக் குழந்தை போலவே தோன்றுகிறார். குழந்தையின் பிறந்த தினத்தன்று அம்மாதான் கேக் வெட்ட வேண்டும் என்பதற்கு அவள் சொல்லும் விளக்கம் அற்புதம்..!
ரக்ஷிதாவின் காதல் கணவனாக வரும் சபரிக்கு, ரக்ஷிதாவை தாங்கும் அளவுக்கான உடற்கட்டு இல்லாவிட்டாலும் கவர்கிறார்.
ஸ்வேதாவின் கணவனாக வரும் ரோகிந்த்துக்கு இரண்டு முகம் இருப்பதை யாராலும் நம்ப முடியாது.
ஆனால் அவரது நண்பர் பவன் கிருஷ்ணாவை பார்த்த உடனேயே வில்லன் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும்.
எல்லா குழப்பங்களுக்கும் ஆறுதல் தரும் ஒரு சாமியாரிணி வேடத்தில் கே ஆர் விஜயா வருகிறார். அந்தக் காலத்தில் தெய்வமாகவே வந்தவர் இப்போது தெய்வ வாக்கு சொல்லி வருவது பொருத்தம்தான்.

சித்தராக வரும் பி.எல். தேனப்பனுக்கு ஓரளவு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு கூட மூதாட்டி ஸ்ரீலேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
ஆரம்பத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து, போகப் போக பெரிதாகி படத்தை முடித்து வைக்கிறார் பிளாட் ஓனராக வரும் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி.
ஸ்வேதாவின் தந்தையாக வரும் அவர் தன் மனைவி, மகள் பற்றி சொல்லும் கதை, கண்ணீர் காவியம்.
இயக்குனர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி படத்தின் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் மட்டுமல்லாமல் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கும் பாடலாசிரியராகவும் இருப்பது ஆரோக்கியமான பங்களிப்பு.
அந்தப் பாடல்கள் கேட்கும் ரகமாகவும் அமைந்திருக்கின்றன. அதிலும் ‘புத்தம் சரணம் கச்சாமி’ பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக பயமுறுத்துகிறது.
முதல் பாதிப் படத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாதி படம் தெளிவாகவும், மனதை நெகிழ வைக்கவும் செய்கிறது.
புதிதாக வரும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் அனைத்தும் நாமே செய்து விட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு நிறைய பேருக்கு இருக்கின்றது அது இவருக்கு சற்று அதிகமாக இருக்கிறது என்று இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முன்பாதியில் கதைக்களம் இல்லாமல் செல்லும் திரைக்கதை பின்பாதியில் திரைக்கதையால் ரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறார் இயக்குனர் அதை முன்பாதியிலும் செய்திருந்தால் படம் எல்லோருக்கும் வெற்றி படமாக அமைந்திருக்கும்.









