‘ராயர் பரம்பரை’ – விமர்சனம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு கழுகு படத்தின் நாயகன் கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராயர் பரம்பரை.தன் ஆசை தங்கை வீட்டிலிருந்து ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன் ஒரே மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் ஜாதகத்தில் இவர் மகளுக்கு காதல் திருமணம் தான் நடக்கும், அதுவும் தந்தையான ஆனந்த் பாபு சம்மதத்துடன் தான் நடக்கும் என ஜோசியர் கூறுகிறார்.
மற்றொருபுறம் ஹீரோ கிருஷ்ணா இவர்களது ஊருக்கு புதிதாக வந்து, காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்ந்து காதலர்களுக்கு எதிராக ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார். இவற்றுக்கு மத்தியில் ஜோசியர் கூறியது பலித்ததா, கிருஷ்ணாவின் பின்னணி என்ன, ஆனந்த் பாபு தன் மகளைப் ‘பாதுகாத்து’ திருமணம் செய்து வைத்தாரா ஆகியவற்றுக்கான விடையை காமெடி கலந்து கொடுத்துள்ள படமே ‘ராயர் பரம்பரை’.

அறிமுக நாயகி சரண்யா. கதை இவர் கதாபாத்திரத்தை சுற்றி நகர்ந்தாலும் நடிக்க வாய்ப்பிருந்தும் ம்ஹூம்… பொம்மை போல் வெறுமனே வந்து செல்கிறார். நாயகியின் அப்பாவாக, கோபம் – காமெடி கலந்து பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவீசி, லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அப்பாவாக ஆனந்த் பாபு ரசிக்க வைக்கிறார். படத்தில் நம்மைக் காப்பாற்றி, பெரும்பாலும் சிரிக்க வைத்து கரைசேர்ப்பதில் இவர் பங்கு முக்கியமானது.
ஜோசியராக வரும் மனோபாலா. தன் உடல்வாகாலும் ஜாலி பேச்சாலும் மறைந்தும் நம்மை சிரிக்க வைத்து அவரை மிஸ் பண்ண வைக்கிறார். இவர்கள் தவிர காதலிப்போரை பிரித்து வைக்கும் சங்கம் நடத்தும் மொட்டை ராஜேந்திரன், காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கடுப்பேற்றி கண்ணீர் வரவழைத்தும், சில இடங்களில் சிரிக்க வைத்தும் தன் வழக்கமான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிக்கிறார்


கணேஷ் ராகவேந்திராவின் இசையில் ‘அரபுநாடு ஈச்சமரம்’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மொத்தத்தில் ஆனந்த்பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என ரசிக்க வைக்கும் காமெடியன்களுடன் களமிறங்கி நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.