தள்ளி தள்ளி போன படம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! – நடிகர் கார்த்தி
நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண்டும். ஆனால், அது தொடுவதற்கான ஆற்றலும், தைரியமும் தமிழ் பற்று வரும் போது, சினிமா மீது காதல் வரும் போது வருகிறது.
40 வருடங்களில் பல முறை மணி சார் முயற்சி எடுத்தும் இப்படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ஆனால், இப்போது அனைத்தையும் வரிசைப்படுத்தினால் நாங்களும் மலேசியா சென்றோம். கமல் சார் கூறியதைப்போல எங்களை மொத்தமாக புல்டோசர் வைத்து ஏற்றிவிட்டார். இந்தப் படம் எடுத்ததே ஒரு விஸ்வரூப வெற்றி. அதற்கே முதலில் மணி சாரை பாராட்ட வேண்டும். இந்த மூன்று தலைமுறை கதைகளை கூறுவதற்கும் அவ்வளவு பொறுமை தேவைப்படும். அத்தனை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். மணி சார் 5hertz வேகத்தில் பணியாற்றுகிறார். பணியாற்றுவதை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. அவர் கூட இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.
தோட்டாதரணி மாதிரி அனுபவம் வாய்ந்த, விஷயமறிந்த ஆட்கள் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு பெருமைபடுகிறோம். அதை விட இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகப் பெருமையாக இருக்கிறது.
இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி எதிர்காலத்தைப் பற்றி பேசக்கூடிய சிறந்த நண்பனாக கிடைத்திருக்கிறார்.