கன்னிமாடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், அடுத்து நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி.
ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீராம் கார்த்திக், தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது முகநூல் மெஸன்ஜரில் ஒரு பெண் தகவல் அனுப்பி அதை தடுக்கிறார். அவளுக்கு எப்படி, தான் தற்கொலை செய்ய போவது தெரியும்? அந்தப் பெண் யார்? என்பது கதை. ஃபேன்டஸி காதல் கதையாக இது உருவாகியுள்ளது. பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, வழக்கம் போல் கவர்ச்சியில் தாராளம் காட்டவில்லை என்றாலும், அந்த குறையை போக்க லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் மனிஷா தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், அழகு மற்றும் கவர்ச்சியில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பமாக இருப்பார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, பாதியிலேயே படத்தில் இருந்து விலகி ஏமாற்றம் அளிக்கிறார்.
ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை பல்வேறு கோணங்களில் காட்சியாக்கி ரசிக்க வைத்திருப்பதோடு, நாயகன் மற்றும் நாயகிகளையும் பளிச்சென்று படம்பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்.திகில் கதையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லும் இயக்குநரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்-ன் பணியும் பாராட்டும்படி உள்ளது.
பார்க்காத காதல், ஒருவர் பார்த்து மற்றொருவர் பார்க்காத காதல் என்று தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வந்திருக்கிறது. ஆனால், இயக்குநர் ரமேஷ் இளங்கமணி சொல்லியிருக்கும் இந்த காதல், இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்று. திகில் படமாக தொடங்கும் கதை, பிறகு காதல் கதையாக விரிவடையும் போது, பார்வையாளர்களை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைய செய்கிறது.
நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், அதை திரை மொழியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி, கதை சொல்லல், திரைக்கதையை கையாண்டது மற்றும் காட்சிகளை படமாக்கியது ஆகியவற்றின் மூலம் ஒரு தரமான படத்தை வித்தியாசமான கதைக்கருவோடு கொடுத்திருக்கிறார்.







