EMI-மாதத்தவனை- விமர்சனம்
அறிமுக நாயகன் படம் என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சத்துடன் படம் பார்க்கும் செல்பவர்களுக்கு இப்படம் நல்ல ஒரு மன நிம்மதியை தரும்.
நாயகன் சிவாவும் நாயகி ரோஸியும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகனுக்கு, தன் காதல் மனைவியை வசதியாக வைத்து வாழவேண்டும் என்று ஆசை. ஆகவே தவணை முறையில் செல்போன், டூ வீலர், கார் எல்லாம் வாங்குகிறார். திடுமென வேலை போய்விடுகிறது. தவணை கட்ட முடியவில்லை.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
நாயகி சாய் தன்யாவும் சிறப்பாக நடித்து உள்ளார். தவணை முறையில் பொருட்களை வாங்குவதை எதிர்ப்பது, வீட்டை விட்டு வெளியேறுவது, பிறகு மனது கேட்காமல் தன் தந்தையிடம் உதவி கேட்பது என்று ஒரு குடும்பத் தலைவியை கண்முன் நிறுத்துகிறார்.
மொத்தத்தில் சிறப்பான நடிப்பு.
நாயகனின் இன்னொரு நண்பராக வருபவர் செயற்கையான நடிப்பால் எரிச்சலூட்டுகிறார்.
சன் டிவி ஆதவன் கலெக்சன் ஏஜண்ட்டாக வந்து மிரட்டுகிறார்.
நாயகியின் தந்தையாக வரும் இயக்குநர் பேரரசு, இயல்பாக நடித்து கவர்கிறார்.
லொள்ளு சபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ‘அடி சூர அழகே ‘ என்ற பாடலில் காதல் ரசம் வழிகிறது. அதே போல, ‘ஐயோ சாமி ஈ.எம்.ஐ’ பாடல், நமக்கு ஒரு பாடம். ஆனால் பின்னணி இசை சுமார்.
ஆர். ராமரின் எடிட்டிங் கச்சிதம்.
நாயகன் சதாசிவம் சின்னராஜ்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார்.
வழக்கமான காதல் படமாகவோ, மசாலா படமாகவோ, த்ரில்லராகவோ இல்லாமல்… வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதை சுவாரஸ்யமாக கொடுக்கவும் முயற்சித்து இருக்கிறார். பாராட்டுக்கள்.
இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடந்த ஒரு விஷயமாக இருப்பதை காட்டிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்