பட்டத்து அரசன் – விமர்சனம்
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் படம் வெளியாகியுள்ளது. அந்த படம் எப்படி இருக்கிறது, பார்க்கலாம்.
பட்டத்து அரசன் படத்தில் ராஜ்கிரண், அதர்வா, ஆஷிகா ரங்கநாதன், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தஞ்சாவூர் அருகே உள்ள காளையார்கோவில் கிராமத்தில் கதைக்களம் அமைந்துள்ளது.
கபடி போட்டிக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் பொத்தாரி மற்றும் அவரின் குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது. பொத்தாரிக்கு இரண்டு மனைவிகள், வாரிசுகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். ஆனால் இரண்டாம் தாரத்தின் மகன் ஆர்.கே.சுரேஷ் கபடி போட்டியில் இறந்துவிடுகிறார். அவர் மரணத்திற்கு பொத்தாரிதான் காரணம் என கூறி ஆர்.கே.சுரேஷ் மனைவி ராதிகா தன் மகனுடன் தாரப் பங்கை வாங்கி கொண்டு தனியாக செல்கிறார். இதற்கு பின் பொத்தாரி குடும்பம் ஒன்று சேர்ந்ததா? ஊர் மரியாதைக்காக வாழ்ந்த பொத்தாரி சந்தித்த இழப்பு என்ன? ஊரே கொண்டாடிய பொத்தாரியை ஏன் வெறுத்தனர்? அதப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன? என்பதுதான் பட்டத்து அரசன்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. அது சார்ந்த காட்சிகளை வழக்கம் போல் தன்னுடைய பாணியில் படமாக்கியுள்ளார் சற்குணம்.
முதல் பாதி முழுவதும் பிரிந்து கிடக்கும் தன்னுடைய குடும்பத்தை சேர்க்க நினைக்கிறார் அதர்வா. அதற்காக பல முயற்சிகளையும் எடுக்கிறார். ஆனால் தொடர்ந்து அவமானங்களை மட்டுமே சந்தித்துகொண்டே இருக்கிறார்.
அந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து தங்கள் ஊருக்கு எதிராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இரண்டாம் பாதி. உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் அதிகம் தென்படுகின்றன. ஆனால் அந்த காட்சிகள் கண்ணீரை வரவைக்கிறதா என்று கேட்டால், இல்லை. இருந்தாலும் படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்க்கிறார் நாயகன், இதன்பின் படம் வேகம் எடுக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தின் பின் நின்று காட்சி அமைப்பதாக கதை எழுதியுள்ளார் இயக்குனர். இதனால் க்ளைமேக்ஸ் வரும் வரை நாயகனோ, அல்லது அவர் சார்ந்தவர்களோ வெற்றிபெறுவது போன்ற காட்சிகள் இல்லை. அதுவே ஒரு வித சோர்வை ஏற்படுத்துகிறது.
சற்குணம் இயக்கிய களவாணி, வாகை சூடவா படங்களில் போகிற போக்கில் பேசும் வசனங்கள் ரசிக்க வைத்திருக்கும். அதில் அவர் கை தேர்ந்தவர். ஆனால் இதில் வெகு சில இடங்களில் மட்டுமே அது போன்ற வசனங்கள் இடம்பெறுகின்றன.
ஜெய்பிரகாஷ், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ் பாலசரவணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் குறைந்த காட்சிகளிலே வருவதாக தோன்றுகிறது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை சற்று குறைத்திருக்கலாம்.
பட்டத்து அரசன் படத்தில் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை ஆகியவை பலம். நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாகவே செய்துள்ளனர். ஆனால் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்ற உணர்வை கொடுக்கிறது.
அதர்வா – சற்குணம் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் மிக சுவாரஸ்யமாக இல்லை என்றால், படு மோசம் என்று சொல்ல முடியாது. மேலும் அதர்வாவிற்கு ஒரு டிசண்டான படம் என்று சொல்லலாம்.