நீண்ட நாட்களுக்கு பிறகு சிபிராஜ் நடித்து வெளிவந்திருக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் டென் ஹவர்ஸ்.
படத்தின் ஆரம்பத்திலேயே இளம் பெண் ஒருவர் கடத்தப்படுகிறார், அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தாத்தா இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்கிறார் இன்ஸ்பெக்டர் சிபிராஜ்.
பெண் கடத்தப்பட்ட வழக்கை சிபிராஜ் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட்ரோல் ரூமுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போன் கால் ஒன்று வருகிறது. இதில் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்படுகிறார், அவரை காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.

இளம் பெண் கடத்தப்பட்டது.. பெண் ஒருவர் பேருந்தில் கொடுமை செய்யப்படுகிறார் என வந்த தகவல்..!! தகவல் கூறிய நபர் பேருந்தில் இறந்து கிடப்பது என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களை சிபிராஜ் சந்திக்க, இதற்கெல்லாம் யார் காரணம் என கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஹீரோ சிபிராஜ் இதுவரை பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும், டென் ஹவர்ஸ் படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதி எதிராக யார் செயல்பட்டாலும், அவருக்கு இரக்கமே காட்டக்கூடாது என்கிற கொள்கையுடன் உள்ள காஸ்ட்ரோ என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.


பின்னணி இசை படத்திற்கு பலம். பல இடங்களில் தொய்வு ஏற்படாமல் இருந்ததற்கு காரணமாமே சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு ஓகே.
ஒரு இரவில் 10 மணி நேரத்தில் நடக்கும் திரைக்கதை ஆங்காங்கே கொஞ்சம் வலு விழுந்தாலும் சுமாரான படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஓகே ரகம்.