• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

by Tamil2daynews
October 30, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

 

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.

விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில்

இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்”  என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன்.

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?  இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.

“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை.

இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.

இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,

இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்  பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,

“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.

நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,

“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,

“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்

நடிகர் பரத் பேசும்போது,

“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.

நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,

“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.

நடிகர் பிரேம்குமார் பேசும்போது,

“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.

நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,

“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.

இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,

“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப்  பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள்.

ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத்  தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள்.

இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச்  செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது.

நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள்   என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.

சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்

இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,

“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம்  என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.

 இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது

“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ,  கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.

நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,

“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.

நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று  கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.

தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,

“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,

“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட  படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர்  கத்தியைக் கொடுக்கத்  தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..

நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.
Previous Post

“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

Next Post

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

Next Post

"அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் " என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

Popular News

  • “ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ” ஆகாசவாணி சென்னை நிலையம் “

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாமனிதன்” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெஸன்ஜர் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 30, 2025

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

October 30, 2025

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

October 30, 2025

“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

October 30, 2025

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்

October 30, 2025

AR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!

October 30, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.