மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் நியூட்டன் சினிமாவும் இணையும் ‘பாரடைஸ்’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் சர்வதேச பிரிமீயர் தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் முதன்மை விருதான “கிம் ஜெசோக்” விருதிற்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரச்சினை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும்.
மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும்,ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை “கே”யும் கையாண்டுள்ளனர்.
பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும். அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.