அந்த நாள் – விமர்சனம்
திரைப்பட இயக்குநரான நாயகன் ஆர்யன் ஷாம், தனது புதிய படத்தின் பணிக்காக இரண்டு பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா என்ற இடத்திற்கு செல்கிறார். இரவு நேரத்தில் அந்த இடத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாமல் போவதோடு, அவர்களை முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன் விரட்டுகிறார். அவர் யார்? அந்த நடத்தில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன?, அந்த வீட்டில் சிக்கிக்கொண்ட ஆர்யன் ஷாம் மற்றும் அவருடன் சென்றவர்கள் தப்பித்தார்களா? இல்லையா?, என்பதை திணறடிக்கும் திகிலோடு சொல்வது தான் ‘அந்த நாள்’.
ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பலம் வாய்ந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் நாயகன் ஆர்யன் ஷாம், முதல் படத்திலேயே எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்து கவனம் ஈர்க்கிறார். ஆறடி உயரம், அமைதியான முகம் என்று ஒரு பக்கம் காதல் கதைகளுக்கு பொருத்தமானவராக இருப்பவர், மற்றொரு பக்கம் கோபமான முகத்தோடு ஆக்ஷன் ஹீரோவாகவும் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார்.
இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.பார்வையாளர்கள் அச்சப்படும் வகையில் திகில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஜே.எஸ்.காஸ்ட்ரோ இயக்குநர் சொல்ல வருவதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதில் சற்று தடுமாறியிருந்தாலும், இறுதியில் சுதாரித்துக் கொண்டு பணியாற்றியிருக்கிறார்.
நரபலியை மையமாக வைத்துக்கொண்டு நாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் எழுதியிருக்கும் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், இயக்குநர் வீவீ கதிரேசன் அதை காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதை சொல்லலில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தேவையில்லாத விசயங்களை திணித்து படத்தை ஜவ்வாக இழுக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் வீவீ கதிரேசன், படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் அழைத்துச் சென்றுவிடுவதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன், பார்வையாளர்களை அச்சத்தில் உறைய வைத்துவிடுகிறார்.
சிறு சிற தவறுகள் படத்தில் பெரிதாக தெரிந்தாலும் நாயகன் ஆரியன் நடிப்பு அதை மறக்க செய்கிறது.