‘டபுள் டக்கர்’ – விமர்சனம்
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் குதூகலமாக கொண்டாட ஒரு திரைப்படம் தான் டபுள் டக்கர்.
ஆர்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ் பாஸ்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஷா ரா, சுனில் ரெட்டி, கருணாகரன் என ஏகப்பட்ட திரைப் பிரலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார்.
படம் தொடங்கியதில் இருந்தே நகைச்சுவையாக நகர்கின்றது. குறிப்பாக லெஃப்ட் மற்றும் ரைட் கதாப்பாத்திரங்களில் இடையிடையில் சினிமா கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்திய காட்சிகளில் எல்லாம் கைத்தட்டல்கள்தான். இந்தக் காட்சிகளுக்கு, சிம்பயாசிஸ் டெக்னாலஜிஸின் அனிமேஷன் பலம் சேர்க்கின்றது. சினிமா கதாப்பாத்திரங்களைக் கடந்து நன்கு பிரபலமான ஒரு கதாபாத்திரம் அந்த அனிமேஷனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாதியில் தீவிரமாக இருக்கும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே காமெடியை தெளித்துள்ளனர். அனிமேஷன் கதாபாத்திரத்தை தவிர மற்றவர்களின் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகவில்லை. திரைக்கதையில் ட்விஸ்ட்கள் இருந்தாலும், அந்த ட்விஸ்ட்டுகள் கதையோட்டத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. பல கதாப்பத்திரங்கள் மனதில் நிற்கும் அளவிற்கு காட்சிப்படுத்தப்படவில்லை. நடிகர்களிடம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை வாங்கி இருக்கலாம். படத்தின் நாயகனான தீரஜின் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி படத்தின் அப்டேட் வெர்ஷனா என்ற கேள்வியையும் மனதில் எழுப்பாமல் இல்லை.