‘ஆயிரம் பொற்காசுகள்’ – விமர்சனம்
ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள்.
குருவாடிப்பட்டி கிராமத்தில் சொந்த வீட்டில் திருமணம் ஆகாத தனிமனிதனாக எந்த ஒரு வேலைக்கும் போகாமல், அரசு மூலம் கிடைக்கும் பொருள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் கோழிகளை திருடி சமைத்து சாப்பிட்டு ஒரு சோம்பேறியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). சென்னையில் ஊர் சுற்றி வம்பு சண்டைக்கு போகும் தன் மகன் தமிழ் நாதனை (விதார்த்) குருவாடிப்பட்டியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார் அம்மா செந்தாமரை (ரிந்து ரவி). அண்ணன் ஆனைமுத்துவின் பொறுப்பில் தன் மகனை விட்டு செல்கிறார் தங்கை செந்தாமரை. குருவாடிப்பட்டியிலும் தமிழ் நாதன் ஜாலியா திரிந்து கொண்டிருக்கும் போது பெட்டிக்கடை நடத்தி வரும் சரசுவின் (தமிழ் செல்வி) மகள் பூங்கோதை (அருந்ததி நாயர்) தமிழ் நாதனை கண்டதும் காதலில் விழுகிறார். இந்நிலையில் அரசு தரும் நிதி உதவி மூலம் கழிப்பறையை கட்டிய எதிர் வீட்டு கோவிந்தன் (ஹலோ கந்தசாமி) வீட்டின் முன் ஆனைமுத்து நின்று புகைப்படம் எடுத்து ஊர் தலைவரிடம் (கர்ண ராஜா) இருந்து தன் வீட்டில் கழிப்பறையை கட்டியதாக அந்த புகைப்படத்தை காண்பித்து பணத்தை பெறுகிறார். ஆனைமுத்து செய்த பித்தலாட்டம் கோவிந்தனுக்கு தெரிய வர, அவர் ஊர் தலைவரிடம் இந்த விஷயத்தை பற்றி கூறி சண்டை போடுகிறார். ஊர் தலைவர் ஆனைமுத்துவை அழைத்து எச்சரித்து உடனே கழிப்பறை கட்டும் படி கூறுகிறார். ஆனைமுத்து கழிப்பறையை கட்டி முடித்தால் தான் கோவிந்தனுக்கு பணம் கொடுக்கப்படும் என்று கூறுகிறார். ஆனைமுத்து மற்றும் மருமகன் தமிழ் நாதன் சேர்ந்து வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்டுவதற்கு மண் தோண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுடுகாட்டில் குழி தோண்டும் அரிச்சந்திரன் (ஜார்ஜ் மரியான்) உதவியுடன் அவர்கள் இருவரும் ஈடுபடுகிறார்கள். அப்போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கின்றன. இதை அவர்கள் மூவரும் அரசுக்கு தெரியாமல் பங்கு போட நினைக்கும் போது பல எதிர்பாரா திருப்பங்கள் நகைச்சுவையாக நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் புதையல் பற்றிய செய்தி அடுத்து அடுத்து இணையும் நபர்களுக்கு தெரிய வரும் போது பங்கு போடுவது விரிவடைகிறது. ஒரு கட்டத்தில் எதிர் வீட்டு கோவிந்தன் மூலம் ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் தமிழ் நாதனாக விதார்த், தாய்மாமன் ஆனைமுத்து வாக சரவணன், காதலி பூங்கோதை (அருந்ததி நாயர்) எதிர் வீட்டு கோவிந்தன் (ஹலோ கந்தசாமி), அரிச்சந்திரன் (ஜார்ஜ் மரியான்) போலீஸ் அதிகாரி முத்து பாண்டியன் (பாரதி கண்ணன்), பொன்ராம் (வெர்டிகல் ராஜா), ஆண்டவன் (பவன் ராஜ்), பிடாரன் (ஜிந்தா), ஊர் தலைவர் (கர்ண ராஜா), அறிவழகன் (ஜிந்தா கோபி), ஆராயி (செம்மலர் அன்னம்), தமிழ் நாதனின் அம்மா செந்தாமரை (ரிந்து ரவி), பூங்கோதையின் அம்மா சரசு (தமிழ் செல்வி) ஆகியோர் தங்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் கண் முன் நிறுத்தி தொடர் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறப்பான நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக சரவணன், ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி ஆகிய அவர்கள் மூவரின் உடல் மொழியும், நகைச்சுவையும் படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஒவ்வொரு தனி நபர்கள் பேராசை கொண்டவர்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர்களில் யாராவது ஒருவரிடம் புதையலாக ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் போது அதை எப்படி அவர் களவாட முயற்சிக்கிறார்கள் என்பதுடன் மக்களுக்கு அரசு கொடுக்கும் பல்வேறு நலத்திட்ட மானியங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக படைத்துள்ளார் இயக்குனர் ரவி முருகையா.
மொத்தத்தில் ஆயிரம் பொற்காசுகள் படம் முழுவதும் சிரித்து, சிரித்து வயிறு குலுங்குவது நிச்சயம்.