தமிழ் சினிமாவில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள கிருஷ்ணகுமார் ராமகுமார் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா அறிமுகமாகியுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலும் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களை தவிர மிதிலா பால்கார், மிஷ்கின், கருணாகரன், நிர்மல் பிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் உருவாகியுள்ளது.

முற்றிலும் புதிய முகங்களுடனும் புதிய ஐடியாக்கள் உடனும் உருவாகி உள்ள படம் தான் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby). படத்தில் தெரிந்த முகங்கள் என்றால் அது விஷ்ணு விஷால், மிஷ்கின் போன்ற சிலர் மட்டும் தான். இதுவே இந்த படத்திற்கு பெரிய பக்க பலமாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக மிதிலா பால்கர் மீரா என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். எமோஷனல் காட்சிகளிலும், வசனங்களிலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அறிமுக நாயகன் ருத்ரா எமோஷனல் காட்சிகளில் சிரமப்பட்டாலும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு புதுவரவு.

இன்றைய தலைமுறை காதலில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக ஓஹோ எந்தன் பேபி படம் அமைந்துள்ளது. ஈகோ மற்றும் புரிதல் இல்லாமல் ஒரு காதல் உறவு எப்படி உடைந்து, சிதைந்து போகிறது என்பதை நல்ல ஒரு திரை கதையின் மூலம் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார். பல காட்சிகள் புதிதாக இருப்பதால் ரசிக்க வைக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.









