சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் இன்று வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அம்மா – மகன் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி என ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், நகைச்சுவை மற்றும் காதல் தருணங்களும் இடம்பெறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலையும் ட்ரைலர் ஏற்படுத்துகிறது.
Chaandi talkies சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பையும், பி. ஜெய் முருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைப் பயிற்சியை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொண்டுள்ளார். இயக்குநர் நானி இயக்குநராக அறிமுகமாகும் படமாகவும் ‘டெலிவரி பாய்’ அமைந்துள்ளது.









