மாமன்னன் படத்தைத் தொடர்ந்து வடிவேலு ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன் . சுதீஷ் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசிலை ஒரு நல்ல ரோட் மூவியில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒரு அனுபவம்தான். முந்தைய படத்தில் இருவரும் நேரெதிர் கதாபாத்திரங்களில் நடித்தார்கள். ஆனால் இந்த முறை இருவரும் நெருங்கி பழகு இரு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடிப்பில் அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை முதல் பாதியில் பார்க்க முடிகிறது. நகைச்சுவை காட்சிகளை திணிக்காமல் இருவருக்கும் இடையில் மிக இயல்பாக நகைச்சுவை துணுக்குகள் எழுதப்பட்டிருந்த விதம் சிறப்பு.
ஆனால் மாரீசன் முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் படம் கிடையாது. இரண்டாம் பாதியில் இருந்து படம் கிரைம் த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. சுவாரஸ்யமான ஒரு திருப்பம் என்றாலும் இந்த இருவரை கடந்து மற்ற பிரச்சனையோ கதாபாத்திரங்களோ கதையில் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கோவை சரளா ஒரு தனித்துவமான சாய்ஸ் தான் என்றாலும் அவருக்கு கதையில் பெரிய பங்கு இருக்கவில்லை. இரண்டாம் பாதியில் குழந்தை வன்கொடுமையைப் பற்றி படம் பேசுகிறது. ஃபிளாஷ்பேக்கில் வரும் இந்த காட்சிகள் மிக தட்டையாக கையாளப்பட்டிருந்தன. படத்தில் உள்ள சின்ன சின்ன ட்விஸ்ட்கள் அந்த கதாபாத்திர வரம்பை மீறாமல் மிக சாமர்த்தியமாக கையாளப்பட்டிருப்பது திரைக்கதை எழுத்தில் பிளஸ். பாடல்களைக் காட்டிலும் யுவனின் பின்னணி இசை கவனமீர்க்கின்றன. கலையரசனின் ஒளிப்பதிவு நிலங்களை எதார்த்தமாக காட்சிபடுத்தியிருந்த விதம் சிறப்பு. ஆனால் குறைகளை கடந்து ஃபகத் ஃபாசில் வடிவேலு காம்போ நம்மை ஏதாவது செய்து ஒரு சிரிப்பை தூண்டுகிறது.
ஆனால் இந்த மாரீசன் படம் மலையாள வாடையுடன் வந்த படம்.








