யாரு போட்ட கோடு – விமர்சனம்
அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்கிறார். அதன்படி, ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த, அரசு சம்மந்தப்பட்ட மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுகிறது. இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதால், ஆசிரியர் பிர்பாகரன் மீது கோபம் கொள்கிறார்.
திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன் ?, வில்லன் லெனின் வடமலை திட்டத்தின்படி நாயகன் பிரபாகரன் பள்ளியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாரா? ஆகிய கேள்விகளுக்கான விடையை, நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கான தீர்வாக சொல்வதே ‘யாரு போட்ட கோடு’.திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன் ?, வில்லன் லெனின் வடமலை திட்டத்தின்படி நாயகன் பிரபாகரன் பள்ளியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாரா? ஆகிய கேள்விகளுக்கான விடையை, நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கான தீர்வாக சொல்வதே ‘யாரு போட்ட கோடு’.
நாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, ஆசிரியை கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் குறையின்றி நடித்திருப்பதோடு, பாடல் காட்சிகளில் வறண்ட நிலத்தை குளிர்விக்கும் அடை மழை போல், பார்வையாளர்களின் மனதுக்கும், கண்களுக்கும் கவர்ச்சி விருந்தும் படைத்திருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக உருவெடுப்பது உறுதி.
வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்கும் வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார். நீளமான வசனங்களை, உணர்ச்சி பொங்க பேசியிருக்கும் துகின் சே குவேராவுக்கு திரையரங்கில் கைதட்டல் கிடைப்பது உறுதி.
வில்லனின் மனைவியாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் உள்ளிட்ட அனைவரும் புதியவர்கள் என்றாலும், தங்களது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
செளந்தர்யன் இசையில், லெனின் வடமலையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஜெய்குமாரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படம் முழுவதும் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருந்தாலும், அவற்றை சில திருப்பங்களுடன் சொல்லி, படத்தை சுவாரஸ்யமாக நகரும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீராம்.
தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, அத்தகையவர்களுக்கு பள்ளி ஆசிரியர் மூலம் அறிவு சாட்டையை சுழற்றியிருக்கிறார்.சமூக பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் படத்தில் பேசியிருப்பது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை மட்டுமே படத்தில் நிரம்பியிருப்பது சற்று சலிப்படைய செய்கிறது. இருப்பினும், இடைவேளை திருப்பம், கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில விசயங்கள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் லெனின் வடமலை, மக்களின் பொழுதுபோக்கிற்கான படமாக மட்டும் இன்றி, அவர்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் இயக்கியிருக்கிறார்.









