ஓம் – விமர்சனம்

ஓம் – விமர்சனம்

 

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீ லீலா இணைந்து நடித்திருக்கும் படம் ரங்கூன், அமரன், படங்களுக்கு பிறகு மூன்றாவதாக இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

போலீஸ்காரர் பழனியை/திரு( தனுஷ்) செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க அந்த கும்பலில் சேரச் சொல்கிறார் சிறப்பு படை அதிகாரியான நித்யா ரெட்டி(சாய் பல்லவி). துபாயை சேர்ந்த அப்துல் ஹமீதுக்கு(நசிருத்தீன் ஷா) தமிழகத்தில் இருந்து செம்மரக் கட்டைகளை கடத்தும் வேலை செய்து வருகிறார் பர்மா கார்த்திகேயன்(மம்மூட்டி). கார்த்திகேயன் கும்பலில் அன்டர் கவர் ஏஜென்டாக போகும் திருவுக்கு தன் முதலாளி மீது தனி பாசம் ஏற்படுகிறது.
கார்த்திகேயனுக்கும் திரு யாரென்று தெரியாததால் அவரின் விஸ்வாசத்தை பார்த்து பாசம் காட்டுகிறார். இந்த பாசத்தால் தான் செய்ய வந்த வேலையை ஒழுங்காக செய்தாரா திரு?
குடும்பஸ்தனான திரு ஏன் இப்படியொரு ஆபத்தான மிஷனை ஏற்று குற்றவாளி கும்பலில் ஒருவராக இருக்க சம்மதித்தார் என்பதை மட்டும் இயக்குநர் விளக்கவில்லை. கணவர் இப்படியான மிஷனில் செல்ல மகனை வைத்துக் கொண்டு வாடுகிறார் மனைவி ரோஜா(ஸ்ரீலீலா). கார்த்திகேயனின் நம்பிக்கைக்குரியவராக மாற திரு துடிப்பது புரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே படம் சூடு பிடிக்கிறது.
இந்நிலையில் இடைவேளையின்போது எதிர்பாராத ஒரு சர்பிரைஸ் வைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. இது மாதிரி குற்றவாளியை பிடிக்க போலீஸ் செல்லும் படத்தில் இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் ஓம் படத்தில் இல்லை. ஒன்று சஸ்பென்ஸ், இரண்டு டென்ஷன். அடுத்ததடுத்து என்ன என்ன என நம்மை பரபரக்க வைக்கவில்லை படம்.

சில இடங்களில் படம் படுவேகமாக செல்கிறது. ஓம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் தான் முதலில் முடிவு செய்தார்கள். அப்படி இருக்கும் அதை ஒரே பாகமாக வெளியிட வேண்டிய நிலையில் இப்படி இரண்டு பாக காட்சிகளை முடிந்த அளவுக்கு இதில் சேர்த்து கொடுக்கும் முயற்சியில் நிதானமாக செல்ல வேண்டிய இடங்களில் நிதானம் இல்லை. தனுஷ் அறிமுக காட்சியில் எல்லாம் வேற லெவல் ஸ்பீடாக இருக்கிறது.

செம்மரக் கடத்தல் தொழிலை காட்டியபோதிலும் அதன் சீரியஸ்னஸை காட்டாமல் சாதாரணமாக வைத்திருப்பது நெருடலாக உள்ளது. கடத்தல்காரரான கார்த்திகேயனை கூட நல்லவராக காட்டியிருக்கிறார் இயக்குநர். கடத்தலில் ஈடுபட்டாலும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனசுக்காரராக வந்திருக்கிறார் கார்த்திகேயன். ஐயா, உங்கள் கோஷ்டியில் ஒரு கருப்பு ஆடு இருக்கிறது என்று சொல்லியும் கூட அதை நம்ப மறுத்து சந்தேகப் பார்வை பார்க்காமல் இருக்கிறார் கார்த்திகேயன் என்பதை நம்மால் நம்ப முடியவில்லை.
நிழல் உலக ஆட்களை அடக்க போராடும் நித்யா ரெட்டியும் ரூல்ஸ்படி மட்டுமே நடப்பாராம். திரு அதற்கு மேல். கடத்தல் கும்பல் தலைவரின் குணத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி அவர் மீது பாசம் வைப்பாராம். தன்னை போலீஸ்காரர் என சந்தேகப்படும் ஆளை தீர்த்துக் கட்டும் வாய்ப்பு கிடைத்தும் கூட செய்யவில்லை. இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கிறது ராஜ்குமார் பெரியசாமி?
தனுஷ் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். திருவாகவே மாறிவிட்டார். கணவர், தந்தையை இழந்த போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. குற்றவாளிகளை அல்ல குற்றத்திற்கான காரணத்தையே ஒழிக்க வேண்டும் என்று செயல்படுகிறார். படத்தில் பெயருக்கு இருக்கிறார் ஸ்ரீலீலா. சாய் அப்யங்கரின் இசை படத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. சாய் அப்யங்கர் சரியான தேர்வு.

operation mole என தலைப்பு வைத்து அதன் மூலம் கதை என்பதை சொல்லிவிட்டார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி . படம் சுவாரஸ்யமாக இருந்தாலும் கிரைம் த்ரில்லரில் இருக்க வேண்டிய சில விஷயங்கள் மிஸ்ஸிங்.

அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து சலித்து போன பழைய கதையை தூசி தட்டி இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஓம் தெய்வீக சொல் என்றாலும் படம் பார்க்கும் பொழுது அந்த ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வைக்கிறது
Next Post

Recent News

error: Content is protected !!