உருட்டு உருட்டு – விமர்சனம்
எந்த நேரமும் குடித்து விட்டு, வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் கஜேஷ் நாகேஷை காதலிக்கும் நாயகி ரித்விகா ஸ்ரேயா, அவரை திகட்ட…திகட்ட…. காதலிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நாயகனோ போதை இறங்க… இறங்க…மது குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், நாயகன் மாதுவை விட மது மீதே அதீத காதல் கொண்டவராக இருக்கிறார்.
காதலனின் நிலை அறிந்து அவரை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கிறார். அது என்ன ?, எதற்காக அப்படி செய்தார் ?, என்பதை சமூக அக்கறையோடும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘உருட்டு உருட்டு’.

நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக வாழ்ந்திருக்கிறார். அவரது மூன்று பொண்டாட்டிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர், எந்தவித பாகுபாடு இன்றி மொட்டை ராஜேந்திரனையும், பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், ஆரம்பத்தில் அதிரடியான வில்லனாக எண்ட்ரி கொடுத்தாலும், அதன் பிறகு அமைதியாக வலம் வந்து மறைந்து விடுகிறார்.
சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. ஒரு மெலொடி, ஒரு கானா என்று இரண்டு வெவ்வேறு வகையிலான பாடல்கள் மூலம் காதலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட ஒரே லொக்கேஷன்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டாலும், சலிப்படையாத வகையில் கோணங்களை கையாண்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், தற்போதைய சமூக சீரழிவை சிரிக்கும்படியான காமெடி ஜானரில் சொல்லியிருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் மூலம் குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சமூகத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் மிக முக்கியமான பிரச்சனையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் கமர்ஷியலாக மட்டும் இன்றி கருத்து ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
இருந்தாலும், கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் ஒரு படமாக கையாண்டிருப்பதோடு, அதை பிரச்சாரமாக சொல்லி பார்வையாளர்களை சோர்வடைய வைக்காமல், காதல் மற்றும் காமெடியை சேர்த்து சொல்லி இரண்டு மணி நேரத்தை எளிதாக கடத்தி, பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.