நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம், ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் வெளியிட்டார்கள்
பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான ‘ஸ்டாப் வெயிட்டிங்’ மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது.


நடிகர் கார்த்தி பேசும்போது, “நானும் ரம்யாவும் பத்து வருட நண்பர்கள். சுஹாசினி மேம் சொன்னது போல ரம்யா எப்போதும் பாசிட்டிவான நபர். இன்றைய தேதியில் ஃபிட்னஸ் என்பது மிகப்பெரிய பிசினஸாக மாறிவிட்டது. பலரும் தனித்தனியாக டயட்டீஷியன், ஹெல்த் எக்ஸ்பர்ட்ஸ் & ஜிம் ட்ரெய்னர்களை வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஒட்டி மக்களை இன்ஃபுளூயன்ஸ் செய்வது எனக்கு சிறிது வருத்தமே. நம் நாடுகளில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு நம் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். அந்த வகையில் ரம்யா இந்த புத்தகத்தில் சிறந்தவற்றை கொடுத்துள்ளார். கடந்த ஐந்து வருடத்தில் ரம்யாவின் மாற்றங்களை கவனித்தே வருகிறேன். இப்போது அவர் ‘Iron Lady’ ஆக உள்ளார். ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது. பலரை குறிப்பாக பெண்களையும் அவர்களது வாழ்க்கை முறையை சரியான வகையில் அவர் இந்த புத்தகத்தின் மூலம் இன்ஃபுளூயன்ஸ் செய்யவுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது”.

நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது, ” ரம்யாவின் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகத்தை படித்ததும் எனக்கு உடனே பிடித்த விஷயம் என்றால் அதன் உண்மைத்தன்மையும் எளிமையும்தான். இதுபோன்ற புத்தகத்தில், எழுத்தாளர்கள் தங்களை மேம்படுத்தியே சொல்வார்கள். ஆனால், தனது குறைகள், தோல்விகள், அதில் இருந்து கற்றுக் கொண்டது என அனைத்தையும் ரம்யா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். என்னைப் போலவே வாசகர்களும் எளிதில் கனெக்ட் செய்து கொள்வார்கள் என நம்புகிறேன். விரைவில் ரம்யா தமிழிலும் எழுத ஆரம்பிக்க வேண்டும். அவருடைய அனைத்துத் திட்டங்களும் வெற்றியடைய எனது வாழ்த்துகள் “.
