தி கிராண்ட் மாஸ்டர் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களம், சமூக அக்கறை மற்றும் புதிய முயற்சிகளுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கும், புதுமுக இயக்குநர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அந்த வரிசையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் கவனம் ஈர்க்கிறது.
ஒரு பக்கம் உணர்வுப்பூர்வமான தாய்–மகன் உறவு, மறுபக்கம் சமூகத் தடைகளுக்கு மத்தியில் ஒரு சிறுவன் காணும் கனவு என இரண்டு தளங்களில் கதை பயணிக்கிறது. குறிப்பாக, செஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற சிறுவனின் கனவும், அந்தக் கனவுக்கு எதிராக நிற்கும் சமூகச் சூழலும் கதைக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.
அபர்ணதி வெள்ளையம்மா என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு தாயாக தனது மகனின் எதிர்காலத்திற்காக போராடும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதைத் தொடுகிறது. ஆரம்பத்தில் மகனின் கனவைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவர், பின்னர் தனது மகனின் திறமையை உணர்ந்து அவனது கனவுக்கு துணை நிற்கும் தருணங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
சுரேஷ் மேனன் கதையின் மோதலுக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகாரம் மற்றும் சமூகப் பின்னணியின் தாக்கத்தையும் அவரது கதாபாத்திரம் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
மேலும், தமிழரசி, லிங்கேஷ், உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
தினேஷ் ஆண்டனியின் பின்னணி இசை, கதையின் உணர்வுகளையும் முக்கியமான தருணங்களையும் சிறப்பாக உயர்த்துகிறது.
ஒட்டுமொத்தமாக, ‘தி கிராண்ட் மாஸ்டர்’ ஒரு சிறுவனின் கனவை மட்டும் பேசும் திரைப்படமாக இல்லாமல், அந்தக் கனவைச் சுற்றியுள்ள சமூகச் சூழலையும், தடைகளையும், ஒரு தாயின் போராட்டத்தையும் பதிவு செய்யும் படமாக அமைந்துள்ளது. வலுவான சமூகக் கருத்து, இயல்பான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.









