‘வீரன்’ விமர்சனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘வீரன்’. ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ளது.
இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளையும் பெண்களை கவரும் விதமாக வந்திருக்கிற ஒரு படம் தான் வீரன்.
ஹிப்ஹாப் தமிழாவின் கேரியரில் சிறந்த படம். பிறந்த சூப்பர் ஹீரோவுடன் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது . பாடல்கள் மற்றும் BGMகள் அனைத்தும் கச்சிதமாக உள்ளன. மின்னல் முரளி என்ற மலையாளப் படம் வியாபாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதை நாம் ஏற்கனவே அறிவோம். அதே போல் இந்த படமும் செய்யும்.

வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் {ஹிப் ஹாப் ஆதி} தனது சிறு வயதில் மின்னலால் திடீரென தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
இதனால், வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து சென்று விடுகிறார். சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.
அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் வில்லன் வினய். தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை சூப்பர் ஹீரோவாக மாறி எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..
ஹீரோ ஹிப் ஹாப் ஆதி வீரன் படத்தின் மூலம் மீண்டும் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். குமரனாக வரும் போதும் சரி வீரனாக வரும் போதும் சரி பட்டையை கிளப்பி விட்டார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஸ்கோர் செய்துள்ளார். கடந்த சில படங்களாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஆதி, இந்த படத்தில் முழுமையாக பூர்த்தி செய்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
கதாநாயகி வரும் ஆதிரா மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. முனீஸ்காந்த் – காளி வெங்கட் காம்போ அல்டிமேட். இவர்கள் இருவரும் வரும் அனைத்து காட்சிகளிலும் திரையரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் மட்டுமே நிரம்பி இருக்கிறது. வில்லனாக வரும் வினய்க்கு மிகவும் குறுகிய காட்சிகள் மட்டும் தான். அவருக்கு படத்தில் பெரிதும் ஸ்கோப் இல்லை.

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் எடுத்துக்கொண்ட கதைக்களம் படத்தின் பிளஸ் பாயிண்ட். ஊர் எல்லையில் நின்று ஊரை காக்கும் எல்லை சாமி சூப்பர் ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் என்ற கான்சப்ட் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. திரைக்கதையில் தொய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நகைச்சுவையாக இருந்தது. அதை சரியாக செய்த இயக்குனருக்கு பாராட்டு.
மொத்தத்துல குழந்தைகளையும் பெண்களுக்கும் பிடிச்ச மாதிரி ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதுல வெற்றியும் பெற்று இருக்கிறார் இயக்குனர்.
இந்த ‘வீரன்’ நிச்சயம் வெற்றி வாகை சூடும்.