இன்ஃபினிட்டி – விமர்சனம்
மென்பனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். ‘இன்ஃபினிட்டி’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் ‘இன்ஃபினிட்டி’ இயக்குநர் சாய் கார்த்திக்.
படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார் நட்ராஜ். ஆனால் அவரின் தோற்றம் கர்ணன் படத்தின் கொடூர பார்வையும், முக அமைப்பையும் நியாபகப்படுத்துகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் இன்னும் மிரட்டியிருக்கலாம். மற்ற கேரக்டர்களுக்கு படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.
‘இன்ஃபினிட்டி’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே வெற்றிக்கான காரணமாக இருக்கும். ஆனால் ‘இன்ஃபினிட்டி’ படம் ஏதோ அவசர அவசரமாக தயாரானது போல இருக்கிறது.
ரசிகர்கள் இதுதான் படமா என நினைத்தால் அங்கே வேறு ஒன்று நடக்கிறது. அதுவே ட்விஸ்ட் ஆகவும் அமைந்துள்ளது. கொலைக்கான காரணமும், அதன் பின்னால் இருக்கும் காட்சிகளும் கதைக்கு கொஞ்சம் கூட வலுசேர்க்கவில்லை. மேலும் ‘இன்ஃபினிட்டி’ படம் இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருப்பதால், ஒருவேளை அடுத்த பாகம் எடுக்கப்பட்டால் முதல் பாகத்தில் இருந்த குறைகள் களையப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பின்னணி இசை சில இடங்களில் கைக்கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ‘இன்ஃபினிட்டி’ படம் ‘இதுக்கு இல்லையா ஒரு எண்டு’ என்பதை போல படம் பார்ப்பவர்களை தோன்ற வைத்துள்ளது.