

சசிகலாவின் அரசியல் நகர்வில் இப்படியொரு ட்விஸ்ட் வருமென அவருக்கு நெருக்கானவர்கள்கூட எதிர்பார்க்க வில்லை. தடாலடியாக ரஜினிகாந்தைச் சந்தித்திருக்கும் சசிகலா, லதா ரஜினிகாந்த் மூலமாக டெல்லியில் சில அரசியல் ‘மூவ்’களைச் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறது சசிக்கு நெருக்கமான வட்டாரம். ‘பா.ஜ.க-வைச் சமாதானப்படுத்த சசி போடும் இந்தப் புதிய கணக்கு பலிக்குமா?’ என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது!
“தம்பி ரைட்டுல போப்பா…” ரஜினிக்கு ரூட் எடுத்த சசி!
ஒரு பத்திரிகையாளர் மூலமாக, இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில நாள்களாகவே திட்டமிடப்பட்டுவந்த இந்தச் சந்திப்பு, நடந்து முடியும்வரை சசிகலா யாரிடமும் இது குறித்து வாய் திறக்கவில்லை. சந்திப்பு எதிர்பார்த்தபடி நிகழ்ந்த பிறகே, தன் குடும்ப உறுப்பினர்களிடம் மிக நம்பிக்கையோடு முழுமையாக மனம் திறந்து மொத்தக் கதையையும் விவரித்திருக்கிறார். சசிகலாவின் ‘இன் அண்ட் அவுட்’ அறிந்த குடும்பப் பிரமுகர்கள் சிலருடன் பேசினோம். ரஜினி – சசிகலா சந்திப்பு குறித்துப் பல விஷங்களைக் கொட்டினார்கள்…
“ஜெயலலிதா நினைவுநாளுக்கு மறுநாள், அதாவது டிசம்பர் 6-ம் தேதி மாலை, தன் வீட்டிலிருந்தவர்களிடம், ‘அக்கா ஞாபகமாகவே இருக்கு. நான் போயஸ் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன். வீட்டு வாசல்ல இருக்குற பிள்ளையார் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். வழக்கமாக அவர் பயணிக்கும் லேண்ட் க்ரூஸர் காரை எடுக்க டிரைவர் முற்பட, ‘இந்த வண்டி வேண்டாம்ப்பா. பல பேர் எங்கே கிளம்புறேன்னு பார்ப்பாங்க. அந்த ஹோண்டா ஜாஸ் வண்டியை எடு’ என்றார் சசிகலா. சற்று நேரத்தில் ஹோண்டா ஜாஸ் வண்டி வந்து நின்றது. தன் உதவியாளர்களுடன் காரில் புறப்பட்ட சசிகலா, வழியில் யாருடனோ ‘அங்கேதான் வந்துக்கிட்டிருக்கேன்’ என்று போனில் சொல்லிவிட்டு கட் செய்திருக்கிறார்.


போயஸ் தோட்டம் பிள்ளையார் கோயிலில், சசிகலாவின் வழிபாடு சுருக்கமாக முடிந்தது. தி.நகர் வீட்டுக்கு வண்டியைக் கிளப்பிய தன் டிரைவரிடம், ‘தம்பி ரைட்டுல போப்பா…’ என்று சசி சொல்ல, அதற்கு டிரைவர் ‘அம்மா, அது முட்டுச் சந்தும்மா…’ என்று சொல்ல, ‘தெரியும். ரஜினி வீடு அங்கேதானே இருக்கு. அவர் வீட்டுக்குப் போப்பா…’ என்று சசி சொன்ன பிறகுதான், ரஜினி வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு வந்திருப்பது காருக்குள் இருந்தவர்களுக்கே புரிந்திருக்கிறது.
“நீங்க அரசியலுக்கு வரணும்..!” – தூண்டில் போட்ட சசிகலா
ரஜினி வீட்டில் அவரும், அவர் மனைவி லதாவும் வாசல் வரை வந்து சசிகலாவை வரவேற்றிருக்கிறார்கள். அப்போது மாலை 6:15 மணி. டிரைவரை பொக்கே வாங்கிவரச் சொல்லிவிட்டு வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்கு ரஜினியிடம் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்திருக்கிறார். சிறுநீரகச் சிகிச்சை தொடர்பாகத் தனக்குத் தெரிந்த சில வெளிநாட்டு மருத்துவர்களைப் பற்றி ரஜினியிடம் பேசிய சசி, தேவைப்பட்டால் அவர்கள் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்த தருணத்தில், தானும் ஜெயலலிதாவும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபோது, அங்கே தங்களுக்கு முன்பாக ரஜினி வந்து காத்திருந்த நிகழ்வுகளையெல்லாம் அசைபோட்டுப் பேசிய சசி, சிறிது நேரத்துக்குப் பிறகு, தன் அரசியல் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். ‘நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க அரசியலுக்கு வரணும்…’ என்று ரஜினியைப் பார்த்து சசிகலா சொல்ல, ரஜினி ஷாக் ஆகியிருக்கிறார்.
அதிர்ச்சி விலகாத ரஜினி, ‘நான் அரசியலைவிட்டு ஒதுங்குறேன்னு சொல்லிட்டேன். என் உடல்நிலை எப்படின்னு உங்களுக்கே தெரியும். கொரோனா சூழல்ல என்னால மக்களை நேரடியாகச் சந்திச்சு பிரசாரம் செய்ய முடியாது’ என்று நெளிந்திருக்கிறார். அதற்கு சசி, ‘கொரோனா ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், நீங்க கட்சி ஆரம்பிக்காததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கு. ஒண்ணு, உங்களுக்குத் தேவையான நிதி இல்லை. இந்த விஷயத்துல பா.ஜ.க-வை முழுவதுமாக நம்பிக் களமிறங்கவும் நீங்க தயாராக இல்லை. இரண்டாவது, தி.மு.க மாதிரியான இயக்கத்தை எதிர்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான கட்சிக் கட்டமைப்பு இல்லை. இது உண்மையா, இல்லையா?’ என்று கேட்டுவிட்டு தீர்க்கமாகப் பார்த்த சசிகலாவிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்திருக்கிறார் ரஜினி.
“ஆட்சிக்கு நீங்கள்… கட்சிக்கு நான்!”
தொடர்ந்து பேசிய சசிகலா, ‘உங்களுக்குத் தேவையான எல்லா சப்போர்ட்டையும் நான் தர்றேன். அ.தி.மு.க என்கிற வலுவான இயக்கம் உங்க பின்னாடி இருக்கும். உங்களுக்கான நிதி பிரச்னையையும் நானே பார்த்துக்குறேன்’ என்று சொல்லவும், ரஜினியிடம் புன்முறுவல் பூத்திருக்கிறது. அதுவரை எதுவும் பேசாத ரஜினி, ‘எல்லாம் சரிதான்… இதுல நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க?’ என்று தன் அரசியல்வாதி முகத்தைக் காட்டியிருக்கிறார். இந்த வார்த்தைக்காகக் காத்திருந்த சசிகலா, ‘டெல்லியில பேசி நீங்கதான் பா.ஜ.க சப்போர்ட்டை எனக்கு வாங்கித் தரணும். நானும் பல வழிகள்ல அவங்களைத் தொடர்புகொள்ள முயற்சி பண்ணிட்டேன். எதுவும் பலிக்கலை. பா.ஜ.க-வுக்குத் தேவை தமிழ்நாட்டுல ஒரு வலுவான கூட்டணிக் கட்சி. அதை என்னால தர முடியும். அதற்கு அ.தி.மு.க என் கட்டுப்பாட்டுக்கு வரணும். அது டெல்லி மனசுவெச்சா மட்டும்தான் முடியும். ரெண்டு வருஷத்துக்கு மேல நான் சிறைத் தண்டனை அனுபவிச்சுருக்கிறதால, இன்னும் ஆறு வருஷத்துக்கு என்னால தேர்தல்ல போட்டியிட முடியாது. அ.தி.மு.க சார்புல நீங்க முதல்வர் பதவிக்கு நில்லுங்க. நான் கட்சியைப் பார்த்துக்குறேன். அ.தி.மு.க-காரங்க உங்களுக்காக உழைப்பாங்க. இந்தக் கட்சி மேலயும், எம்.ஜி.ஆர் மேலயும் உங்களுக்கு எப்போதும் தனிப்பாசம் உண்டு. இந்தக் கட்சி அழியக் கூடாது. நீங்க நினைச்சா, இதெல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்று குண்டை வீசியெறிந்திருக்கிறார். இந்த தடாலடியை ரஜினி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சில நிமிடங்கள் மெளனமாக இருந்த ரஜினி, ‘அரசியல்லருந்து விலகிட்டேன்னு சொன்ன பிறகு, மீண்டும் தொடங்குறதுக்குச் சங்கடமா இருக்கு. ஆன்மிகப் பாதையில போறதைத்தான் என் மனசும் உடலும் விரும்புது’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாக இருந்திருக்கிறார். அந்த அசாதாரண அமைதியைக் கலைக்கும்விதமாக ‘நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… மேடத்துகிட்ட நான் பேசிக்குறேன்’ என்று சொல்ல, ரஜினி அங்கிருந்து கிளம்ப, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன.
டயல் செய்த லதா… கிடைக்குமா டெல்லி சிக்னல்?
அனைத்தையும் கச்சிதமாகப் புரிந்துகொண்ட லதா, தன் போனை எடுத்து டெல்லியிலுள்ள ஒரு மூத்த பா.ஜ.க தலைவரின் நம்பருக்கு டயல் செய்திருக்கிறார். மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான அந்தத் தலைவர், உத்தரகாண்ட், ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர். விரைவில் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேசத் தேர்தலில், சில முக்கிய அசைன்மென்ட்டுகள் அவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இதற்காக, தற்போது லக்னோவில் முகாமிட்டிருக்கிறார் அந்தத் தலைவர். அவரிடம் நிலவரத்தை இந்தியில் விளக்கிய லதா, தனக்கருகில் சசிகலா இருப்பதாகக் கூறியிருக்கிறார். சசியிடம் போனை கொடுக்கச் சொன்ன அந்தத் தலைவர், ஆங்கிலத்தில் நலம் விசாரித்துவிட்டு, ‘உங்க மேல பிரதமருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அதை மாற்றாமல், உங்களுக்கு அனுகூலமாக எதுவும் செய்துவிட முடியாது’ என்றிருக்கிறார். அதற்கு சசிகலா, ‘என்னைப் பற்றிச் சொன்னவர்கள், தவறாகச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் , அவ்வளவுதான். நீங்க நினைச்சீங்கன்னா, இதையெல்லாம் மாத்திடலாம். எடப்பாடி பழனிசாமி அரசை நான்கு ஆண்டுகள் காப்பாற்றியது பா.ஜ.க-தான். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து சீட்களுக்கு மேல் உங்களுக்கு அவர்கள் ஒதுக்கவில்லை. என் கையில் அ.தி.மு.க வந்துவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 20 சீட்டுகள் ஒதுக்குகிறேன். ஒன்றுபட்ட அ.தி.மு.க-வாக, வலுவான கூட்டணி பலத்தோடு நீங்கள் கூடுதல் எம்.பி சீட் ஜெயிக்கலாம். தவிர, ரஜினியை முதல்வராக முன்மொழியவும் நான் தயார். எனக்கு அதிகாரப் பதவி ஏதும் வேண்டாம். கட்சி என்னிடம் வந்தால் போதும். என்மேல் இருக்கும் வழக்குகளையும் தோண்டாமல் இருக்க வேண்டும்’ என்று சசிகலா தன் திட்டத்தை விவரித்திருக்கிறார். சில இடங்களில், லதா ரஜினிகாந்தும் அந்த பா.ஜ.க தலைவரிடம் இந்தியில் பேசி, திட்டத்தை விளக்கமாகக் கூறியிருக்கிறார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்த பா.ஜ.க தலைவர், ‘பிரதமரிடம் இப்போது இது குறித்துப் பேச முடியாது. முதலில் அமித் ஷாவிடம் பேசுகிறேன். அவர் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்திருக்கிறார். அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்காக, சசிகலா எடுத்திருக்கும் இந்த மாஸ்டர் பிளான் ‘சக்சஸ்’ ஆகுமா என்பது டெல்லியிலிருந்து கிடைக்கும் சிக்னலைப் பொறுத்தே தெரியும்” என்றனர்.
இந்தச் சந்திப்பு குறித்து லதா ரஜினிகாந்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “இப்போதைய சூழலில் ரஜினிக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லை. ஆனால், லதாவுக்கு அரசியல் ஆசை உண்டு. மன்றத்தைவிட்டு விலகியவர்கள் போக, எஞ்சியிருப்பவர்களைத் தனது அமைப்பின் பக்கம் வரவழைப்பதுதான் அவரது அரசியல் திட்டம். அவரது அமைப்பின் மாநிலச் செயலாளரான திண்டுக்கல் தம்புராஜ், முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர். அவர் மூலமாக அரசியல்ரீதியான சில நகர்வுகளை லதா ரஜினிகாந்த் செய்துவருகிறார். தமிழகத்தின் 38 மாவட்டங்களில் லதா தலைமையில் நடந்துவரும் ‘பீஸ் ஃபார் சில்ரன்’ என்கிற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. சமீபத்தில், அந்த அமைப்பின் பெயரை `பீஸ் ஃபார் சில்ரன் பாரத சேவா’ என்று திடீரென பெயர் மாற்றம் செய்தார் லதா. சமீபத்தில், அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளைச் சென்னைக்கு அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றித் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். மேலும், டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடவும் திட்டமிட்டிருக்கிறார். இவை எல்லாமே தனக்கான அரசியல் வாய்ப்புக்காக லதா எடுக்கும் நடவடிக்கைகள்தான். இப்போது சசிகலா மூலமாக அதற்கான ஓப்பனிங் கிடைத்துவிட்டதாக நினைக்கிறார் லதா” என்றனர்.
மாலை 6:15 மணிக்கு ரஜினி வீட்டுக்குள் நுழைந்த சசி, இரவு 9:50 மணி வரை அங்கே இருந்தபடியே பல அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ரஜினி வீட்டில் அமர்ந்து ஆன்மிகக் கதைகள் கேட்கும் மனநிலையில் சசிகலா நிச்சயமாக இல்லை. ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவரும் தேர்வாகிவிட்ட சூழலில், டெல்லியைச் சாந்தப்படுத்தி, தனக்கான அரசியல் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ‘ரஜினி’ என்கிற துருப்புச்சீட்டைக் கையிலெடுத்திருக்கிறார் சசி. அவரது வியூகம் பலிக்குமா என்பது டெல்லியின் சிக்னலைப் பொறுத்தே தெரியவரும்!
******
பா.ஜ.க-வே சர்வரோக நிவாரணி!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர், எடப்பாடிக்கு ஆதரவாக டெல்லியில் லாபி செய்துவருகிறார். அந்த லாபியை எதிர்த்து, எந்த வழக்கிலும் தான் ஜெயிக்க முடியாது என்று கருதுகிறாராம் சசிகலா. டெல்லி பா.ஜ.க தலைமையிடம் சரணாகதி அடைவது ஒன்றே சர்வரோக நிவாரணி என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகக் கூறுகிறது சசிக்கு நெருக்கமான வட்டாரம்!
இந்த வலையில் எல்லாம் சூப்பர் ஸ்டார் சிக்குவாரா படையப்பா திரைப்படத்தில் ஒரு பாடலில் வரும் வரிகள் போல வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது என்று பாடியிருப்பார் அதுபோல சசிகலாவின் சூழ்ச்சி வலையில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!
4 Attachments