குழலி விமர்சனம்
தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த முன்னணி நட்சத்திர படைப்பாளிகள், தங்களின் பார்வையை அகில இந்திய அளவில் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதற்கான கதை மற்றும் கதை களங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழ் ரசிகர்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதிலும் அவர்களுக்கு மண் மணம் மாறாத உயிர்ப்புள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற அக்கறையுடன் இயங்கும் ஒரு சில படைப்பாளிகளில் ‘குழலி’ படத்தின் இயக்குநரும் ஒருவர். அப்படியென்ன வித்தியாசமான படைப்பை வழங்கி விட்டார்? என்பதைத் தொடர்ந்து காண்போம்.

எம்மில் பலரும் கேட்கலாம். இன்னுமா கிராமங்களில் மாசற்ற காதல் இருக்கிறது.? இருக்கிறது, என்று விவரித்ததுடன் அல்லாமல், அவர்களுக்குள் சாதிக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. ஆனால் அந்தக் கனவை கடக்க, அவர்கள் காதலை கடக்க வேண்டும். காதல் என்று வந்து விட்டால், சமூகமும், சாதியும் உட்பகுந்து அவர்களையும், அவர்களது கனவுகளையும் சிதைத்து விடும்.
இதனைக் கடந்து தான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது என்பதனை முகத்தில் அடித்தாற் போல் ஓங்கி அழுத்தமாக உரைத்திருக்கிறார் இயக்குநர்.

காதலித்த காரணத்தினால் அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் சேர்த்து அழிக்கிறது என்பதை துணிச்சலுடன் சொல்லி இருக்கும் இயக்குநருக்கு தாராளமாக பாராட்டு தெரிவிக்கலாம்.
கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி, தன்னுடைய மகளை கடும் போராட்டங்களுக்கு இடையே வளர்க்கிறாள். அவள் காதலில் விழுந்த போது, அவளின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், சாதி சனங்கள் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறார். அவளின் நம்பிக்கையை சாதி சனம் காப்பாற்றவில்லை. அதனால் அவள் சாதிகள் மீது வெறுப்புக் கொண்டு காரி உமிழும் போது.. பார்வையாளர்களுக்கும் அதே போன்ற உணர்வு எழுவதால் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.
அழுத்தமான கதையை விவரிக்கும் போது, அதிலும் நனவோடை உத்தியை பின்பற்றி இயக்குநர் கதையை விவரிக்கும் போது, உச்சகட்ட காட்சி இப்படித்தான் இருக்கும் என பார்வையாளர்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆனால் நடந்தது அதுவல்ல… வேறொரு சம்பவம் என்று இயக்குநர் விவரிக்கும் போது, பார்வையாளர்களின் புருவம் ஆச்சரியத்தால் உயர்கிறது. இதனால் ‘குழலி’ இனிய புல்லாங்குழல் ஒலியைப் போல் ஒலிக்கிறது.