‘ஆலன்’ – விமர்சனம்
8 தோட்டாக்கள், ஜீவி பட புகழ் வெற்றி நடித்திருக்கும் படம் ஆலன்.
சிறு வயதில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த தியாகு, ஒரு விபத்தில் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழக்கிறார். இதனால், மனமுடைந்து காசிக்கு ஓடி விடுகிறார்.
அங்கு ஆன்மீக வாழ்க்கை வாழத் துவங்குகிறார் தியாகு. பல வருடங்களாக சிறுவயதில் ஏற்பட்ட விபத்து அவரின் மனதிற்கு வடுவாக நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், தியாகுவிற்குள் இருக்கும் எழுத்துத் திறமையும் ஆன்மீகத்தை தொடர மறுக்கிறது.
அதனை ஏற்றுக் கொண்டு காசியிலிருந்து சென்னைக்கு வருகிறார் தியாகு. வரும் வழியில் நாயகி மதுராவை சந்திக்கிறார். அவருடன் நட்பு ஏற்பட, சென்னையில் இருவரும் சேர்ந்து பழக ஆரம்பிக்கின்றனர்.
நட்பானது நாளடைவில் காதலாக மாறுகிறது. ஒருநாள், சில விஷமிகளால் மதுரா கொல்லப்படுகிறார். இதனால், வாழ்க்கையே வெறுத்துப் போன தியாகு மீண்டும் சன்னியாச வாழ்க்கைக்குச் செல்கிறார்.
அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி, இப்படத்தில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முகம் முழுவதும் தாடியை வளர்த்துக் கொண்டு இக்கதாபாத்திரத்திற்கு துளியும் பொருத்தமில்லாத ஹீரோவாக தான் தென்பட்டார்.
நாயகி மதுரா, தேவதையாக சில காட்சிகளில் வந்து சென்றார். ஒரு சில காட்சிகள் என்றாலும், மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி விட்டார் அனு சித்தாரா.
ஒரு அமைதியான நீரோட்டம் போன்ற ஒரு கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை திரைக்கதையாக கொடுக்கும் இடத்தில் சற்று தடுமாறியே சென்றிருக்கிறார்.
காட்சிகளை இன்னும் சற்று யதார்த்தமாகவும் உயிரோட்டமாகவும் கொடுத்திருந்திருக்கலாம்.,,
இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக நிற்கிறது.