அமரன் – விமர்சனம்
சிவகார்த்திகேயனின் கேரியரை அமரனுக்கு முன் அமரனுக்குப் பின் எனப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்தவரா இவர்?’ என்று கேட்க வைத்ததில் உள்ளது இந்தப் படத்தின் வரவேற்பும் வெற்றியும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் மற்றும் சோனி தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அமரன். இது ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) என்று வந்துள்ளது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான படங்கள் மிகைப்படுத்தலான கதையமைப்பால் எடுக்கப்பட்ட ஒன்றாகவே வெளியாகியிருக்கின்றன. அதுவும் தமிழில் தேசபக்திப் படங்கள் என்றால் அர்ஜுனும், கேப்டனும் தான். அப்படியிருக்கையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு ராணுவ வீரரின் கதையை அவரது மனைவியின் பார்வையில் தந்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபெக்காவாகச் சாய் பல்லவி. “இந்தக் கடலுக்கும் ஆகாயத்துக்கும் உள்ள தொடர்புபோல ஒரு தொலை தூர உறவு தான்” எனக்கும் எனது கணவன் முகுந்திற்கும் என்று ஆரம்பிக்கிறார் சாய் பல்லவி.
தொடர்ந்து விரியும் அவர்களது இளமைக் காலங்கள், கல்லூரி நிகழ்வுகள், பெரிய சம்பவங்களோ அல்லது சங்கடங்களோ இல்லாமல் மிக இயல்பாக உருவாகும் காதல். அதற்கு ஒரு தரப்பு பெற்றோரின் ஆதரவு, மற்றொரு தரப்பில் எதிர்ப்பு என வளர்கிறது படம். தொடக்கத்தில் ஓர் அரை மணி நேரம் கதை இப்படித் தான் நகர்கிறது.“மேடையேறுவதற்கு பயமென்றால், அதை உடைப்பதற்காக நாம் செய்ய வேண்டிய முதல் செயல் மேடை ஏறுவது தான்” என்று அவரை ஒரு ரேம்ப் வாக்கிற்காகத் தயார் செய்கிறார் சிவகார்த்திகேயன். இந்த ஒரு சம்பவத்தில் இருவரும் தங்கள் வாழ்வு இப்படித்தான். இனிமேல் ஒன்றாகத்தான் என்று முடிவு செய்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதே எனது வாழ்வின் லட்சியம் என்று சொல்லும் முகுந்திற்கு அனைத்து விதங்களிலும் துணையாக இருக்கிறார் இந்து. மதங்களோ கடவுள் நம்பிக்கைகளோ இவர்களுக்கிடையில் வருவதில்லை. சொன்னபடி ராணுவத்தில் சேர்கிறார். எல்லைப் பாதுகாப்பிற்கு முதலில் அனுப்பப்படும் முகுந்த் காஷ்மீரில் பணியாற்ற அழைக்கப்படுகிறார்.
முகுந்த் வரதராஜனாகச் சிவகார்த்திகேயன். கல்லூரிப் பருவத்திலும் சரி. ராணுவத்தில் சேரும்போதும் சரி மேஜராக வளர்ந்து நிற்கும் போதும் சரி அப்படியே கண் முன் வந்து நிற்கிறார். எந்த இடத்திலும் தனது வழக்கமான விளையாட்டுத் தனமான உடல்மொழியோ, வார்த்தை உச்சரிப்புகளோ வராமல் புகுந்து விளையாடியிருக்கிறார். மிடுக்கான நடையுடனும், பார்வையுடனும் அவர் நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன.
இவருக்குச் சற்றும் குறையவில்லை மனைவி இந்து ரெபெக்காவாக வரும் சாய் பல்லவி. எந்த விதமான ஒப்பனையும் இல்லாமல் இவர் தான் உண்மையான ரெபெக்கா என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அந்த அளவு மலையாளம் அல்லது மலையாளம் கலந்து தமிழ் பேசிக்கொண்டு உயிர்ப்புடன் அந்தப் பாத்திரத்தைச் செய்து காட்டியிருக்கிறார். காதலர்களாகவும் தம்பதியாகவும் இவர்கள் அவ்வளவு கச்சிதம். இதைத் தவிர ராகுல் போஸ், புவன் அரோரா, கீதா கைலாசம் என அனைவரும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார்கள்.
இவர்களைத் தவிரப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள் உண்டு.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சாய், எடிட்டர் கலைவாணன்.
இப்படித் தான் ஆரம்பிக்கும், இப்படித் தான் வளரும், இப்படித் தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும், படம் முடிந்த பின்னரும் ரசிகர்கள் இருக்கையை விட்டு எழாமல் முகுந்த் வரதராஜனின் உண்மைக் குடும்பத்தையும் அந்த ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கைதட்டிக் கொண்டாட வேண்டிய ஒரு க்ளைமாக்ஸ் அழுத்தமான நடிப்பினால் அவர்களை அழுத்தி வைக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் கண்ணில் நீருடன் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது.
இது சாதாரணமாகக் கைதட்டி விசில் அடித்துப் பார்க்க வேண்டிய படமல்ல. அப்படிப் பார்க்கவும் முடியாது. ஓர் இரண்டரை மணி நேரம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் பங்கெடுத்துக் கொண்டு திரும்பும் உணர்வு தான் பலருக்கும் வரும்.
எமோஷன் என்ற பெயரில் உணர்சிகளைக் கொட்டி புல்லரித்தே ஆக வேண்டும் என்று காட்சிகளை வைக்க இவர்கள் மெனக்கெடவில்லை.
குறைகளைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இந்தப் படம் பார்க்கத் தேவையில்லை.
மக்கள் இங்கு நிம்மதியாகத் தூங்கி எழுந்து தீபாவளி கொண்டாடிப் படம் பார்க்கையில் எல்லையிலும், போர்க்களத்திலும் அவர்களுக்காகக் காத்து நிற்கும் உயிர் விடும் ராணுவ வீரர்களுக்கு இந்தப் படம் ஓர் அஞ்சலி.