‘மௌனகுரு’, ‘மகாகமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!
திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூகவலைதளங்களிலும் வைரலானது.
இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இன்று வெளியாகியுள்ள புதிய டிரெய்லரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட திரையுலகில் உள்ள 6 முக்கிய நட்சத்திரங்களை இந்த டிரெய்லர் உடனடியாகக் கவர்ந்தது.
இயக்குநர் சாந்தகுமார் கூறும்போது, ”கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். ஒட்டு மொத்த படக்குழுவினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து, மே 10 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதை நடக்கும். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.