“ஸ்டார்” – விமர்சனம்
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் கொண்டாடப்படும் ஒருவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் பியார் பிரேம காதல் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் இளன் இயக்கத்தில் ”ஸ்டார்” படத்தில் கவின் நடித்துள்ளார்.இந்த படத்தில் அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஸ்டார் படத்தின் ட்ரெயிலரிலும் படத்தின் பெயரிலும் ஏற்கனவே இது ஒரு நடிகனின் கதை என்பதை காட்டிவிட்டனர். அதன் தாக்கமே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை.
இவர்களை தாண்டி நடிகர் சுகுமார் வரும் காட்சி மிகவும் அற்புதமாக காட்டப்பட்டுள்ளது. சினிமா ஒருவரை எந்தளவு உயர்த்திப் பார்க்கும். அதே அளவிற்கு கீழே தாழ்த்தியும் விடும் என்பதை மிக அழகாக காட்டியிருப்பார்கள். அந்த காட்சியில் சுகுமாரின் சொந்த அனுபவத்தையே இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதற்கு நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும்.
கல்லூரி காலங்களுக்கான காதலும், பின் அந்த காதல் பிரிவதும், அதன் பின்பு புதியதாக ஒரு காதல் வருவதும் என்பது ஏற்கனவே பல படங்களில் பார்த்த ஒரு விஷயமாக இந்த படத்தில் அமைந்திருந்தது. மேலும் திரைத்துறையில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சவாலான விஷயங்கள் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அந்த சவாலான விஷயங்களை இயக்குனர் ரசிகர்களுக்கு உயிர்ப்புடன் காட்டியிருக்கிறாரா? என்றால் நிச்சயம் அதற்கு பதில் இல்லை என்பதே ஆகும்.
படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது யுவன்ஷங்கர் ராஜாவின் இசை. குறிப்பாக, மும்பையில் கவின் படும் இன்னல்களின்போது வரும் மெல்லிசைக்கு தியேட்டரில் பலத்த வரவேற்பு. அந்த பாடலின்போது பலரும் ஆர்ப்பரித்து ரசித்த நிலையில், அதுபோன்ற ஒரு நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அந்த பாடல் நிச்சயம் அவர்களது கடந்த கால கஷ்டங்களை கண் முன் கொண்டு வரும்.அதேபோல, கவின் அவரது கல்லூரி நிகழ்ச்சியில் பெண்களை ஊக்கப்படுத்தும் வசனம் பாராட்டத்தக்கது. விபத்திற்கு பிறகு முடங்கும் கவினின் காட்சிகளும் நன்றாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கவினின் குடும்பம், அவரது காதல் மற்றும் அவரது மனைவியைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகளுக்கு அளித்த முக்கியத்துவம் அளவிற்கு அவர் நடிகனாக போராடும் காட்சிகளுக்கு அளிக்கவில்லை என்றே சொல்லலாம்.