‘மெய்யழகன்’ – விமர்சனம்
விஜய்சேதுபதி,திரிஷா நடித்த 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி , அரவிந்த் சுவாமி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். ஜெயபிரகாஷ் , தேவதர்ஷினி , ஶ்ரீதிவ்யா , ராஜ்கிரண் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.
உறவுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனையால்தான் வாழ்ந்த வீட்டை விற்று தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறபட்டு செல்கிறார் அருள்மொழி வர்மண் (அரவிந்த் சுவாமி). வருடங்கள் கழித்து தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சொந்த ஊரை விட்டு பிரிந்த ஏக்கம் மனதில் இருந்தாலும் உறவுக்காரர்கள் மீது ஏற்பட்ட கசப்பால் விருப்பமில்லாமல் கிளம்பிச் செல்கிறார் அருள்.
எடுத்த எடுப்பிலேயே அருளுடன் சகஜமாக பேசி அத்தான் அத்தான் என அருளை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி . ஆனால் அருளுக்கு கார்த்தியை சுத்தமாக நினைவில் இல்லை. இதை எப்படி கேட்பது என தயக்கப்பட்டு சரி ஊருக்கு போகும் வரை தெரிந்தமாதிரியே காட்டிக்கொண்டு சமாளித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைக்கிறார் அருள். தஞ்சாவூரின் தொன்மையான இடங்கள் , ஆறுகள் , இருள் கவிழ்ந்த சாலைகளின் வழியே ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக நீள்கிறது மெய்யழகன் படத்தின் கதை.
பிரேம்குமாரின் 96 , தற்போது மெய்யழகன் இரண்டு படங்களுமே வெகுஜ மக்களுக்கு மிக நெருக்கமான உணர்வுகளை மையப்படுத்திய படங்களே. இரண்டு படங்களும் கடந்த காலத்தை நினைவு கூறும் கதைகளே. ஆனால் டெம்ப்ளேட் ஆன கதை சொல்லல் இல்லாமல் தன்னுடைய அனுபவம் மற்றும் ரசனைகளின் அடிப்படையில் பிரேம்குமார் இந்த படங்களை கையாள்வதே இந்த படங்களை மற்ற படங்களைக் காட்டிலும் தனித்துவமானதாக மாற்றுகிறது.
முதல் பாதியின் ஹைலைட் என்றால் தனது தங்கைக்காக அரவிந்த் சாமி வாங்கிவந்த நகைகளை ஒவ்வொன்றாக போட்டுவிடும் காட்சியை சொல்லலாம். 96 படத்தில் ஜானு சாப்பிடுவதை ராம் வேடிக்கை பார்க்கும் காட்சியைப்போல் ஒரு அற்புதமான அனுபவம்.
மிகத் தாமதமாகவே கதைக்குள் வருகிறார் கார்த்தி. படத்தின் நாயகன் என்றால் அது அரவிந்த் சாமி. ஆனால் அந்த நாயகனை முழுமையாக்குபவர் கார்த்தி. முழுக்க முழுக்க உணர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒரு உண்மையாக பாத்திர படைப்பு கார்த்தி. அதனை அவர் தனது நடிப்பால் உயிர்பித்யிருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது. தான் பேசவேண்டிய அரசியல் , தன்னுடைய வரலாற்று பற்றிய புரிதல் என எல்லாவற்றையும் கார்த்தியின் கதாபாத்திரம் வழி நமக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர். ஆற்றில் அமர்ந்தபடி கார்த்தியும் அரவிந்த் சாமியும் அமர்ந்து கரிகாலச் சோழனைப் பற்றியும் , ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு , ஈழப்போர் பற்றி பேசும் காட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையிலும் இல்லாமல் தமிழ் நிலத்தின் பிரதிநிதியாக கார்த்தியை பிரதிபலிக்கிறது. நிதானமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் தொய்வடையும் நேரத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் நம் உணர்வெழுச்சிகளை தட்டி எழுப்புகிறது.
மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாகம் பல இடங்களில் கடைசி விவாசாயி படத்தை நினைவுபடுத்துகிறது.
கதாபாத்திரங்கள் தவிர்த்து விலங்குகள் பறவைகள் , சைக்கிள் , ஒரு இடம் என எல்லாவற்றையும் வைத்து கதை சொல்கிறார். தொடக்க காட்சியில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு நடுவே தனியாக அரவிந்த் சாமி உட்கார்ந்திருக்கும் ஒரு ஷாட்டில் அந்த மனிதனுக்குள் இருக்கும் தனிமை சொல்லப்பட்டு விடுகிறது. கைவிடப்பட்ட ஒரு சைக்கிள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை படிக்க வைக்கிறது.
மெய்யழகன் படத்தில் கடைசிவரை தஞ்சாவூர் பெரியகோயிலை நாம் தூரத்தில் இருந்து தான் பார்க்கிறோம். அதேபோல் வரலாற்று முக்கியத்துவமான சிதிலமடைந்த சேர சோழ போர் நடந்த இடம் இந்த படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படி பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் சென்றாலும் படத்தின் மையக்கதையை விட்டு நம் கவனம் தப்புவதில்லை. தனக்கு தன்னையே தன் ஊரை தனக்கே புதிதாக காட்டும் கார்த்தியின் பெயரை கடைசிவரை நினைவுக்கு கொண்டுவர முடியாமல் தவிக்கிறார் அரவிந்த் சுவாமி. திரையில் ஒவ்வொரு முறை ஒரு பெயர் பலகை வந்தால் பார்வையாளராக நாமும் கார்த்திக்கு அந்த பெயரை பொறுத்திப் பார்க்கிறோம்.
கோவிந்த் வசந்தாவின் இசை ஆற்றின் நீரோட்டம் போல் கதை முழுக்க ஒரு இனிமையான சலசலப்பை ஏற்படுத்தியே இருக்கிறது. இந்த படத்தில் இசை எவ்வளவு பெரிய பலம் எப்பதை பின்னணி இசையே இல்லாத ஒரு சில காட்சிகளை கவனித்தால் புரியும். கமலின் குரலில் வரும் போறேன் நான் போறேன் பாடல் இதயத்தை கனக்கச்செய்யும் ஒரு பாடல்.
முன்பே சொன்னது போல் கார்த்தியை அவரது கதாபாத்திரத்தையும் பிரித்தே பார்க்க முடியாத அளவிற்கு அவர் நடிப்பு இருக்கிறது. அரவிந்த் சுவாமியின் குரலிலும் உணர்ச்சிகளை மிக சிக்கனமாக வெளிப்படுத்தும் அவரது இயல்பும் , அவ்வப்போது வெளிப்படும் குழந்தைத்தனமான விளையாட்டுக்களும் ஒரு பேரனுபவம்.
சில காட்சிகளே வந்தாலும் ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது. அவரது மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் டப்பிங் சிறப்பாக அமைந்திருந்தது. பஸ் கண்டக்டராக கருணாகரன் ஒரு குட்டி கேமியோ செய்திருக்கிறார். ஜெயபிரகாஷ் , ராஜ்கிரண் , தேவதர்ஷினி மீட்டரில் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு பக்கபலமே கார்த்தியும், அரவிந்த்சாமியும் இவர்கள் வருகிற காட்சி எல்லாம் மனதை வருடுகிறது.