அயோத்தி – விமர்சனம்
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பாலிவுட் நடிகர் யாஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அயோத்தி. படத்தின் தலைப்பைப் பார்த்ததும் மத அரசியல் சார்ந்து ஒரு படமாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் திரையரங்கிற்குள் நுழைந்த போது நம் எண்ணத்தை தவிடு பொடி ஆக்கிவிட்டது.
கதைப்படி,
யாஷ்பால் ஷர்மா அயோத்தியில் வசித்து வருகிறார். மனைவி, கல்லூரியில் படிக்கும் மகள் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பள்ளி படிக்கும் மகனோடு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்து மதத்தைச் சார்ந்தவரான இவர், தனது மதத்தில் தீவிரமாக இருக்கிறார்.
பாசத்தை எப்போதுமே வீட்டில் தராத யாஷ்பால், தனது கோபத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார். தீபாவளி தினத்திற்கு குடும்பத்துடன் இராமேஸ்வரத்திற்குச் செல்ல முடிவெடுக்கிறார் யாஷ்பால்.
அதன்படி, இரயிலில் மதுரை வந்து இறங்குகின்றனர் யாஷ்பால் குடும்பத்தினர்.அங்கு ஒரு வாடகை வாகனத்தை எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரம் செல்கின்றனர். வாகனம் சென்று கொண்டிருக்கும் போது, டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் யாஷ்பால். இதனால் எதிர்பாராத விதமாக யாஷ்பால் மனைவி இறந்து விடுகிறார். அம்மாவை இழந்து கதறி அழுகின்றனர் மகளும் மகனும்.

வாகனம் ஓட்டுனரின் நண்பராக வருகிறார் சசிகுமார். தனது தாயின் உடலை சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல சிரமப்படுகிறார் ப்ரீத்தி. மொழி தெரியா ஊரில் வந்து சிக்கி தவித்த ப்ரீத்தி அஸ்ராணியை சசிகுமார் எப்படி அயோத்திக்கு அனுப்பி வைத்தார்..?? ப்ரீத்தி தாயாரின் உடலை அயோத்தி கொண்டு செல்ல என்னென்ன சிரமத்தை சந்தித்தார்.?? குடும்பத்தின் அருமையை யாஷ்பால் புரிந்து கொண்டாரா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக சசிகுமார் நடித்திருந்தாலும், யாஷ்பால் தான் கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார். தமிழ் தெரியாது ஹிந்தி மட்டுமே படத்திலும் பேசியிருக்கிறார். முக பாவனை, கோபம், வெறுப்பு, என பல பாவனைகளை காண்பித்து பார்ப்போரின் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். மனைவியிடம் வெறுப்பைக் காட்டும் இடமாக இருக்கட்டும் அதே மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழும் காட்சியாக இருக்கட்டும் இரண்டிலும் டாப் ஹியர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி, நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார். தனது கண்பார்வையிலேயே ஆயிரம் நடிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். மனதில் வைத்த லட்சோபலட்சம் கோபத்தை தனது தந்தையிடம் காட்டும் இடத்தில் அப்ளாஷ் வாங்குகிறார்.
அதிகமாக நடிக்காமல், அளவாக நடித்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சசிகுமார். இவருக்கு கைதுணையாக நடித்த விஜய் டிவி புகழ், ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்ப காட்சியில் வைத்திருந்த சண்டைக் காட்சியை தவிர்த்திருந்திருக்கலாம்.
படத்தின் மற்றொரு நாயகன் என்றே கூறலாம் இவரை.. அவர்தான் இசையமைப்பாளர் ரகுநந்தன். படம் பார்க்கும் அனைவரும் ஒரு இடத்திலாவது கண்களில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்ததில் ரகுநந்தனின் பின்னணி இசை பெரும் காரணியாக இருக்கக் கூடும்.
அம்மாவின் உடலை பிணவறையில் இருந்து வாங்கும் காட்சியாக இருக்கட்டும், தனது மனைவியின் உடலை பார்த்து கணவன் கதறியா காட்சியாக இருக்கட்டும், சசிகுமார் தனது பெயரை கூறும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் இவரது இசை மனதை உருக வைத்துவிட்டது.
மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். அயோத்தியின் அழகையும் இராமேஸ்வரத்தின் அழகையும் ஒருசேர கொண்டு வந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் மகேஷ்.
முதல் படத்தையும் முத்தாக கொடுத்து காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்து கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி.
கோலிவு சிகப்பு கம்பளம் விரித்து இயக்குனர் மந்திரமூர்த்தியை வரவேற்கிறது. தமிழ் சினிமாவில் அசைக்க முடியா சக்தியாக இயக்குனர் உருவெடுப்பார் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
அயோத்தி – மனிதத்தை போற்றும் காவியம்