ராஜ பீமா – விமர்சனம் ரேட்டிங் 3 / 5
‘பிக் பாஸ்’ புகழ் ஆரோ நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராஜ பீமா.
சிறுவன் ராஜாவுக்கு (ஆரவ்), யானை என்றால் மிகவும் பிடிக்கும். யானை விளையாட்டு பொம்மையுடனேயே எப்போதும் விளையாட விரும்புவான். இந்நிலையில் அம்மாவை இழக்கிறான். மிகவும் சோகமான இந்தக்கட்டத்தில் அவனுக்கு ஒரு யானை குட்டி கிடைக்கிறது. சந்தோஷமடைகிறான். அவனது அப்பா, அதற்கு ‘பீமா’ எனப் பெயரிட்டு அந்த யானையை வளர்க்க முடிவு செய்கிறார். இருவரும் ‘ராஜபீமா’ வாக நெருக்கமாக அன்புடன் வளர்ந்து விடுகிறார்கள். காட்டுக்குள் நடக்கும் சட்டவிரோத செயல்களை ராஜாவும் பீமாவும் ஒன்று சேர்ந்து தடுப்பதோடு, ஒருவரை விட்டு ஒருவர் பிரியமுடியாத அளவிற்கு நண்பர்களாகி விடுகின்றனர்.

ஆரவ், மாஸ் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளோடும், கதாபாத்திரத்திற்கேற்றபடி கச்சிதமாக, கம்பீரமாக இருக்கிறார். யானைக்கும் அவருக்குமான நெருக்கம், சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது
.ஆஷிகா நெர்வாலுக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம். அதை அவரும் அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார்.
விவகாரமான அமைச்சராக கே.எஸ்.ரவிக்குமார். முதலமைச்சர் கனவில் அவர் செய்யும் வேலைகள் பகீர்! அரசியல்வாதிகளின் வில்லத்தனத்தை, தனது தேர்ந்த நடிப்பின் மூலம் கண்முன் நிறுத்துகிறார்.
யோகிபாபு, ‘பொள்ளாச்சியின் பிரதமர்’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் கலகலப்பு ஊட்டுகிறார்.
ஓவியா, ஒரு பாடலுக்கு வந்து கலர்ஃபுல் உடைகளில், கவர்ச்சி காட்டுகிறார்.
மற்றபடி, வழக்கமான சினிமா ஃபார்முலாவில் உருவாகியிருக்கும் ‘ராஜபீமா’ வில், சொல்ல எதுவுமில்லை!