சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டு ஒன்றின் மூலம் நண்பர்களாகும் மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேருக்கும், அதே 2000 ரூபாய் நோட்டின் மூலம் பிரச்சனையும் வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘லெக் பீஸ்’.
குயில் என்ற கதாபாத்திரத்தில் சவுரி முடி வியாபாரம் செய்பவராக நடித்திருக்கும் மணிகண்டன், கிளி ஜோதிடராக நடித்திருக்கும் கருணாகரன், பேய் விரட்டுபவராக நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக நடித்திருக்கும் ரமேஷ் திலக் என நான்கு பேரும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தின் கதாபாத்திரங்கள் போல் பசியோடு சுற்றினாலும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.
படம் முழுவதும் வரும் யோகி பாபு, வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைத்தாலும், தன் மனைவி குறித்து காமெடி என்ற பெயரில் பேசும் வசனங்கள் அனைத்துமே அநாகரிகமானதாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், ஆரம்பத்தில் சற்று தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் திருப்பங்கள் மூலம் சுவாரஸ்யமாகவும், வசனங்களில் இருக்கும் நகைச்சுவை மூலம் கலகலப்பாகவும் படம் நகரும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன், கிரைம் திரில்லர் ஜானரை நகைச்சுவை பாணியில் சொல்ல முயற்சித்திருப்பதோடு, நகைச்சுவை நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டு நகைச்சுவை திருவிழாவையும் நடத்தியிருக்கிறார்.
நடித்திருப்பதோடு படத்தை இயக்கவும் செய்திருக்கும் ஸ்ரீநாத், ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், அவர்களை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியின் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக பயணிப்பதோடு, பார்வையாளர்களை வாய்விட்டு சிரிக்க வைத்து மகிழ்விக்கிறது.
2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் போது தொடங்கும் கதை, 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெற்ற காலக்கட்டத்தில் முடிவதையும், அதைச் சார்ந்த சம்பவங்களை முழுக்க முழுக்க நகைச்சுவையாக வடிவமைத்து பார்வையாளர்களை வஞ்சகம் இல்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த படத்திற்கு லெக் பீஸ் என்று தலைப்பு வைத்ததற்குப் பதில் ’2000 ரூபாய் நோட்டு’ என்று தலைப்பு வைத்திருக்கலாம்.
கேமராமேனன் கை வண்ணத்தில் படம் கண்களை ரம்யமாகின்றது.
ஸ்ரீநாத்தின் இயக்கம் ஒரு சில இடங்களில் தடுமாறினாலும் கிளைமாக்ஸ் மனதை கவவுகிறது.