• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

by Tamil2daynews
February 24, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

 

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசமுரளி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கி என்ன நடக்குது? கொள்ளிடம், கபிலவஸ்து இரண்டு படமும் சின்ன சின்ன கிடுக்குப்பிடில தப்பிச்சி வந்திருச்சி… கொள்ளிடம் 2016-யிலும் கபிலவஸ்து 2019-யிலும் வெளியானது. கபிலவஸ்துலயும்  எனக்குப் பிரச்சனை வந்தது. அதை மீறி சர்டிபிகேட் வாங்கி படத்தை ரீலிஸ் பண்ணேன். கற்பு பூமி படம் எதைப் பற்றியது என்றால் எல்லோருக்கும் தெரியும் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று. நக்கீரன் முதற்கொண்டு எல்லா செய்தித்தாள்களிலும் படித்த செய்திகளை வைத்துத் தான் நான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தேன். இந்த படம் துவங்கியதில் இருந்தே நெருக்கடி தான். இன்று கூட பாடல்களையோ படத்தின் காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

பொள்ளாச்சிக்கே சென்று மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது அறிந்து கொண்ட ஒரு சம்பவம் தான் இப்படம். இது போன்ற செய்திகள் எல்லாம் பெரும்பாலும் வெளியில் வரவில்லை. நான் இந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறேன். அந்த ஆதாரங்களைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று சொல்கிறார்கள் சென்சார் போர்டு உறுப்பினர்கள். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்துக் கொண்டு உருவாக்கிய திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்? இரண்டு மணி நேர படத்தைப் பார்த்துவிட்டு 4 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் சொல்லிய முதல் வார்த்தை படத்திற்கு சர்டிபிகேட் தரமுடியாது.. நீங்கள் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது என்றார்கள். நான் அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே சார் என்று கேட்டதற்கு, இல்லை இப்படம் வெளியானால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை வெடிக்கும். அதனால் அனுமதிக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி மறுபரிசீலனை கோருங்கள், நடிகை கவுதமி தலைமையில் 15 பேர் திரைப்படத்தைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்றார்கள்.

தியேட்டரில் சென்சார் உறுப்பினர்களுடன் படம் பார்க்க நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறேன். யார் யாரோ வந்தார்கள். சிலர் ஏ.கே 47 துப்பாக்கி பாதுகாப்புடன் வருகிறார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு மீண்டும் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் படத்தின் எண்ட் கார்டை தூக்குங்கள் என்றார்கள். சரி அடுத்து என்ன என்று கேட்டால் பொள்ளாச்சி என்கின்ற டைட்டிலை தூக்குங்கள் என்கிறார்கள். பிரச்சனை நடந்த ஊரின் பெயரை எப்படி மாற்றுவது என்று நான் வாதிட்டுப் பார்க்கின்றேன். அவர்கள் யாரும் என் வாதத்தை கேட்கும் மனநிலையில் கூட இல்லை.

எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஒரு நாள் பத்திரிகையிலோ டிவியிலோ இது போன்ற செய்திகள் வரும். ஆனால் தற்போது அது போன்ற செய்தி இல்லாத நாளே இல்லை எனலாம்.

இப்படத்திற்கு நான் இயக்குநர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் கூட என்பதால் படத்தை எப்படியாவது ரீலிஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்து, அவர்கள் சொன்ன 109 கட்-களுக்கு உடன்பட்டு, எண்ட் கார்டை தூக்கி, டைட்டிலை பொள்ளாச்சி என்று வைக்காமல் மாற்றி, யூனியனில் மற்றொரு டைட்டிலை ரிஜிஸ்டர் செய்து, மீண்டும் சென்சார் சர்டிபிகேஷனுக்கு விண்ணப்பித்தேன்.

என்னுடைய கதைகள் எல்லாமே பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள் தான்.  என் அடுத்த படமும் பாலியல் பிரச்சனை சார்ந்தது தான். இயக்குநர் சங்கத்தில் அய்யா செல்வமணி சார் அவர்கள் 2500 கதைகளைக் கேட்டு அதில் 52 கதைகளை படமாக்க தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கதையும் ஒன்று. அதில் 10 கதைகளை அய்யா ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருக்கிறார்கள். அவருக்கு நன்றி.

பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும் போது…

இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைகளுக்காகத் தான் நான் சினிமாவுக்கே வரவில்லை. பத்திரிகை பக்கம் போய்விட்டேன். இவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி மற்றும் மணிப்பூர் இவைகளை நாங்களும் பேசி இருக்கிறோம்.

இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூஸ் முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறுவினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன்.

இந்த பொள்ளாச்சி மேட்டருக்கே வருகிறேன்.  மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள்.

சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்டக் கேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள் என்று கேட்டார்கள். நான் யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன்.

இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது. எங்களுக்கும் அந்த கோபம் இருக்கிறது. மணல்மேடு விஷயத்தை 1994லயே நான் அட்டைப்படமா எடுத்தேன். ஒரு பிள்ளைய வீடு தேடி வந்து சிதைச்சிட்டாய்ங்க. பால்டாயில் குடிச்சி குடும்பமே இறந்துட்டாங்க. 30 வருசம் ஆச்சி. இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைஞ்ச பாடு இல்ல… கூடத் தான் செய்யுது…

இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்படுங்கள். அதற்கு நக்கீரனும் துணை நிற்கும் என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். வெற்றி, வெற்றி, ஜெயிக்கிறோம். இயக்குநர் நேசமணியைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். பெரும் போராட்டங்களுக்கு நடுவில் தான் அவர் படங்களை எடுக்கிறார். ஆனால் அந்தப் படங்கள் வெளிவர முடியாத படங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த தருணத்தில் நாம் அனைவரும் அவருக்கு ஆறுதலாக இருப்போம். இந்தப் படத்தில் ஒரு காதல் பாடல், ஒரு குத்துப் பாடல், பாரதி ஐயாவின் பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது…

இவ்விழாவிற்கு எங்களை அழைத்த நேசமுரளிக்கு மனமார்ந்த நன்றி. இந்த அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும் போது தாக்குதல் துவங்கிவிடுகிறது.

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டைப் போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும், ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன்.

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிடக் கழகத்தை தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல..

கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம்.

ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்த்து. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு, மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கத் தலைவரும், மற்றும் சன் செய்திகள் பத்திரிகையாளருமான டாக்டர் எஸ்.என்.பிரபுதாசன் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். நேசமுரளி எப்போதும் கொந்தளிப்போடு தான் இருப்பார். சினிமாவை விட அரசியல் அவருக்கு நன்றாக வரும் என்று தோன்றுகிறது. கேரளாவில் சாலையோரம் குடியிருப்போருக்கு ரேஷன் கார்டு வழங்கினார்கள். அதை அவர் திரைப்படத்தில் காட்சியாக்கினார். நான் அதை செய்தியாக்கினேன். கபிலவஸ்து திரைப்படத்திற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றிருக்கிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தான் நாம் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டியது இருக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் போது…

எங்கெல்லாம் அதிகார அத்துமீறல் நடக்கிறதோ அதைத் தோலுரித்துக் காட்டி அவர்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் மகத்தான பணியை இயக்குநரும் தயாரிப்பாளரும் செய்திருக்கிறார்கள். ஆனால் இதை அங்கீகரிக்கும் சமூகமாக, அரசாக, சென்சார் போர்டாக சமகால சமூகம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

தமிழ்நாட்டில் நடந்ததை அப்படியே ராவாக திரைப்படத்தில் காட்டி எடுத்ததால் சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை.

இதுதான் கள நிலவரம். இல்லையென்றால் நீங்கள் திரைத்துறையில் இருந்து வெளியேறி ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு தான் போராட வேண்டும். எனவே அண்ணன் செல்வமணி மற்றும் நக்கீரன் கோபால் அவர்கள் கூறியதை போல சற்று வளைந்து கொடுத்து தான் நீங்கள் மக்களிடம் கூற விரும்பும் கருத்தை கூற வேண்டும்.

இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது…

‘கற்புபூமி’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நேசமுரளி சினிமாவிற்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் கருத்தியல் ரீதியாகப் போராடுவது ஒரே விசயமாக இருந்தாலும், திரைப்படம் மற்றும் திரைத்துறை என்பது பெரும் பொருள் கோரும் துறை. ஒரு கருத்தினை மக்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் 3 கோடியில் இருந்து உங்களுக்குச் செலவாகும். எங்களுக்கு ஒரு தெருமுனையும் மைக்கும் தான். அதுவும் இல்லை என்றால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ரோட்டில் இறங்கிவிடுவோம். மிரட்டல்கள் உங்களை விட எங்களுக்கு அதிகமாக வரும். ஆனால் பொருளாதார இழப்புகள் என்பது பெரிதாக இருக்காது.

நீங்கள் ஒரு படத்தை எடுப்பதோடு உங்கள் நோக்கம் முழுமையடைந்து விடாது. அதை மக்கள் பார்க்கும் போது தான் உங்கள் நோக்கம் முழுமையடையும். எனவே இது போன்ற தடைகளைத் தாண்டி எப்படி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். படத்தை வெளியிடுவது என்பது கடினமான வேலை. மேலும் இன்று தியேட்டர்களும் குறிப்பிட்ட சிலரின் கைகளில் தான் இருக்கின்றது. அவர்கள் எந்தப் படம் ஓடவேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ அந்தப் படம் தான் ஓடுகிறது. மற்ற படங்களை ஓடவிடமாட்டார்கள்.

கருத்துள்ள நல்ல படம் ஓட மாட்டேன் என்கிறது. நன்றாக ஓடும் படங்களில் கருத்தே இல்லை. நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள். அப்படங்களை எப்படி மக்களிடம் சென்று சேர்ப்பது என்பதை யோசியுங்கள்.

இருப்பினும் இப்படி ஒரு கருத்தைப் பேச வேண்டும் என்று எண்ணிய உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள். மேலும் நாட்டில் நடக்கும் இது போன்ற குற்ற நிகழ்வுகள் குறித்து இளைஞர்கள் பேச முன்வர வேண்டும். இயக்குநர் நேசமுரளி இது போன்ற சமூக அக்கறை கொண்ட பல படங்களை உருவாக்கி வெற்றி பெற்றிட வாழ்த்துகள்.

அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசும் போது…

நல்ல பாட்டு கேட்க வந்தேன். கேட்க வந்த கச்சேரி வேறு, கேட்ட கச்சேரி வேறு. எம்.ஜி.ஆர் படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள். மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்கின்ற வரிகளைப் பாட தடை விதித்தார்கள். மேடையில் முழங்கு திருவிக போல் என்றே அப்பாடல் பொது இடங்களில் ஒலித்த்து.

சென்சார் போர்டில் அரசியல் கட்சிக்காரர்கள் இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். சினிமா வேறு அரசியல் வேறு இரண்டும் பின்னலாம். ஆனால் சிக்கல் வரக்கூடாது. பல நாடுகளில் சென்சார் கிடையாது. சுதந்திரம் இருக்கும் போது தான் படைப்பு முழுமையாகும். இங்கு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கக் கூடாது. இருக்க வேண்டும், ஆனால் சரியாக இருக்க வேண்டும். இயக்குநருக்கு நான் சொல்ல விரும்புவது இயக்குநர் செல்வமணி போல் நேக்கு போக்குடன் இருக்க வேண்டும். நீங்கள் மூன்று படம் ஏற்கனவே எடுத்திருந்தாலும் கூட, கசப்பு மருந்தை இனிப்புடன் சேர்ந்து கொடுப்பது போல் கொடுங்கள்.  இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது. படத்தினை தர்மத்திற்கு எடுக்க முடியாது.

உங்கள் போராட்டத்தையும் உங்கள் துணிவையும் பாராட்டுகிறேன். இருப்பினும் படம் வெளியிடப்பட வேண்டும். அதற்கான வேலைகளைப் பாருங்கள். ஏனென்றால் நீங்கள் சினிமாவிலிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்கள் இலக்கு வெற்றி என்றால் சில ராஜதந்திரங்களோடு செயல்படுங்கள் என்பதே எங்கள் அறிவுரை.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது….

அனைவருக்கும் பணிவான வணக்கம். காலையில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள். அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கேற்க வேண்டிய நெருக்கடியான நிலையில் கால தாமதம் ஆகிவிட்டது. அதற்காக பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நேசமுரளி அவர்கள் முற்போக்கான இயக்குநர். சொல்லப் போனால் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞர். வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர்.

படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம். அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடு தான் அவரை துணிவாக இருக்கும்படி இயங்கும்படி தூண்டிக்கொண்டும் இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பொள்ளாச்சியில் நடந்தது அவ்வளவு குரூரமானது. அதனைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். அதனை என்றால் அந்தப் போக்கினை அது போல் வளர்ந்து வரும் கலாச்சாரத்தினை. சமூக ஊடகம் வளர்ந்திருக்கும் இந்தக் காலச்சூழலில் இந்தப் போக்கு வளருவது எவ்வளவு ஆபத்தானது. எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. அப்படிப்பட்ட குரூரமான நிகழ்வை படைப்பாக்க வேண்டும் என்று முடிவு செய்து துணிச்சலான முடிவு.

90களில் ஒரு கவிதை எழுதினேன். ”எதனையும் எதிர் கொள்ள இரு விழிப்பாய்,. இமயம் போல் தடை வரினும் எகிறிப் பாய்” என்று. எதனையும் எதிர்கொள்வோம், அந்த துணிச்சல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியார் சொல்வார், “நீ போராடிப் போராடி உரிமையை வென்றெடுப்பாய், பாராளுமன்றத்தில் பேசி அதற்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை இயற்றுவாய், ஆனால் நீ இயற்றும் சட்டமே செல்லாது என்று சொல்லுகிற இடத்தில் அவன் இருப்பான்” என்று சனாதன சக்திகளை அப்போதே தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார்.

ஆனாலும் கூட அதை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றால் வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். எங்கு சனாதனம் இருக்கிறது என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் அந்தக் கட்சியினை வெறுக்கிறீர்கள் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள்.ஆர்.எஸ்.எஸ் ஒரு இயக்கம் தானே..? அதை எதிர்த்து ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். வரலாற்றுப் பின்னணி தெரிந்து கொண்டால் நிச்சயமாக இந்தக் கேள்விகளே எழாது. தனிப்பட்ட முறையிலே நமக்கு எந்த அரசியல் பகையுமே இல்லை. இது ஒரு கோட்பாட்டுப் பகை. கெளதம புத்தர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு யுத்தம் இது. இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

‘கற்பு பூமி’ என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது…? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கே உருவாகிவிடப் போகிறது. பெண்களுக்கு எதிரான குரூரம் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்?

ஏன் அவர்கள் அச்சப்படுகிறார்கள். நூற்றுக்கு நூறு இது கருத்தியல் சார்ந்த பகைதான். நேசமுரளி உள்வாங்கி இருக்கும் இடதுசாரி அரசியல் தான், அதாவது கம்யூனிஸ்ட் சிந்தனை அல்ல, வலதுசாரி சிந்தனைக்கு எதிரான எல்லாமே இடதுசாரி சிந்தனை தான். பழமைவாதத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பேசும் அனைத்து சிந்தனையும் இடதுசாரி சிந்தனை தான். பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான். இந்தப் படத்திற்காகவே நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதை நீங்கள் முன்னெடுத்தால் கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கெடுப்போம் என்று சொல்லி வாழ்த்தி விடை பெறுகிறேன்.
Previous Post

‘ வித்தைக்காரன்’ – விமர்சனம்

Next Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

Next Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

Popular News

  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.