விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்தது . இதேபோல் கிரைம் த்ரில்லர் படமாக விறுவிறுப்பான இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகியுள்ளது ஆர்யன். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இது வழக்கமான சீட்டின் நுணியில் உட்கார வைக்கும் த்ரில்லர் படம் கிடையாது. இந்த படத்தில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் ஒரு சமூக கருத்தும் இருக்கிறது. அதானால் இப்படம் தனித்து நிற்கிறது. பார்வையாளர்களை பயமுறுத்தவோ சுவாரஸ்யத்தில் நகம் கடிக்கவோ இந்த படம் முயற்சிப்பதில்லை . அதனால் ராட்சசன் படம் போல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் செல்லாதீர்கள் , ஆனால் கிரைம் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு நல்ல தீணி போடும் படமாக ஆர்யன் படம் இருக்கும் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ள ஆர்யன் படம் வித்தியாசமான சமூக கருத்துள்ள ஒரு கிரைம் த்ரில்லர் ” என்றே கூறலாம்.
காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் தோணியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மானாசா உடனான காதல், திருமணம், விவாகரத்து என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்புகளை ஒரு பாடலின் மூலம் வெளிக்காட்டினாலும், அதை தனது அழுத்தமான நடிப்பு மூலமாகவும், உடல் மொழி மூலமாகவும் அனாசியமாக ரசிகர்களிடத்தில் கடத்தி அசத்தியிருக்கிறார். கொலைகளை தடுப்பதற்கான முயற்சியில், அவர் சேகரிக்கும் தகவல்கள், அதனை வைத்து நடத்தும் விசாரணை என்று படத்தின் விறுவிறுப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என்று படம் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் தனது பின்னணி இசை மூலம் கடத்துகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
பயப்படுவதையும் தாண்டிய ஒரு உணர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும், என்ற சவாலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தன் கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம், பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் படத்தொகுப்பு மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஸ்டண்ட் ஷில்வா, பி.சி ஸ்டண்ட் பிரபு ஆகியோரது சண்டைக்காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்.கே, இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை கையாண்டிருப்பதோடு, அதை நம்பும்படி லாஜிக்கோடு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
கொலையாளி யார்? என்பது தெரிந்து விட்டாலும், அவரைப் பற்றி சிந்திக்க விடாமல், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் ஹீரோவின் பயணத்தை படு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அவ்வபோது செல்வராகவனின் செயல்களை புத்திசாலித்தனமாக சித்தரித்து காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார்.
பொதுவாக சைக்கோ திரில்லர் படம் என்றாலே, கொலைகளை இரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கதிலங்க வைக்க முயற்சிப்பார்கள். ஆனால், அத்தகைய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல், ஒவ்வொரு கொலைகளையும் அறிவியல் பூர்வமாக நிகத்துவதோடு, காட்சிகளில் எந்தவித வன்மத்தையும் வெளிப்படுத்தாமல், அதன் பின்னணியில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை சொல்லியிருக்கும் இயக்குநர் பிரவீன்.கே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைவரும் பார்க்க கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாகவும் கொடுத்திருக்கிறார்.








