
✍தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலசுந்தர் என்பவரது மகன் ராம்குமார் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
✍இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ராம்குமார் பழைய வண்டி வாங்குவதற்காக ஆன்லைனில் தேடியுள்ளார்.
✍திருடிய நபர்கள் வண்டியை விற்பதற்காக OLX ல் பதிவு செய்துள்ளார்கள். இதை பார்த்த வண்டியின் உரிமையாளர் ராம்குமார் விற்பனைக்கு பதிவு செய்த நபரை தொடர்பு கொண்டு வாங்குவதற்கான விபரங்களை கேட்டுள்ளார். அவர்களோ தூத்துக்குடி கால்டுவெல் காலணி பகுதிக்கு வரும்படி பதில் சொல்லியுள்ளனர். ராம்குமாரும் கால்டுவெல் காலணி பகுதிக்கு சென்று விற்பனைக்கு வைத்திருந்த வண்டியை பார்த்துள்ளார். பார்த்தவுடன் விறபனைக்காக வைத்துள்ள வண்டி தனக்குரிய வண்டி தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்.
✍இதன் பின் வண்டியின் விலையை விற்பவரிடம் கேட்டுள்ளார். அவர்களும் வண்டி உரிமையாளரிடம் பேரம் பேசி முடிக்க முயற்சித்துள்ளார்கள். இதில் அவர்கள் நிர்ணயித்த தொகையில் கரராக பேசியுள்ளார். இறுதியில் ராம்குமார் சரி என ஒப்புக் கொண்டு பணம் எடுத்து வருவதாக சொல்லி விட்டு நேராக காவல்நிலையத்தில் விபரங்களை கூறியுள்ளார். காவல்துறையினர் அவர் பின்னால் போலீஸ் உடையின்றி சாதாரண நபர் போல் உடையனிந்து ராம்குமார் நண்பர் போல் கால்டுவெல் காலணிக்கு சென்றுள்ளனர். போனவுடன் வண்டியை கொண்டு வரச்சொல்லி கேட்டுக்கொண்டனர்
✍வண்டியை கொண்டு வந்ததும் போலீசார் ராம்குமாரின் வண்டிதானா என்பதை மேலும் ஒரு முறை சோதனையிட்டனர். போலீசாரும் ராம்குமார் வண்டி தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டதும் வண்டியை விற்பதற்காக கொண்டுவந்த சந்தோஷ் என்பவரை சம்பவ இடத்தில் கையும் களவுமாக பிடித்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீசார் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணையை தொடங்கினார்கள். அந்த விசாரணையில் பண்டாரம்பட்டி கருவேலன் மகன் சந்தோஷ் (வயது.23) என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சந்தோஷின் கூட்டாளிகளான கால்டுவெல் காலணியை சேர்ந்த துரைப்பாண்டி மகன்
மணி (வயது.23) , ஆசிரியர்காலணியை சேர்ந்த துரை என்பவரது மகன் சரவணன் (வயது.22) ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் பின் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
✍மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்தை பார்த்து “யார் நீங்கள்” என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டார். இந்த கேள்வி அந்த தருணத்தில் சமூக வலைதளங்கள் , பத்திரிக்கைகள் முதல் ஆங்கில ஊடகங்கள் வரையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது ரஜினிகாந்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அன்று அந்த பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர் தான் இந்த பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பண்டாரம்பட்டி சந்தோஷ் என்பது குறிப்பிடத்தக்கது.








