இந்த சம்மரில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஆக்சன் கிங் அதிரடியை கலக்கும் அவருடன் அபிராமியும் பிரீத்தி முகுந்தனும் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காட்சிக்கு காட்சி அதிரடியையும் உணர்ச்சியையும் சமநிலைப்படுத்தி, ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் ஒரு முழுமையான பேமிலி ஆக்ஷன் டிராமாவாக வந்திருக்கிறது “பிளாஸ்ட்”. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சாதாரண ஆக்ஷன் படமாக இல்லாமல், வலுவான கருத்தும், உறுதியான கதாபாத்திரங்களும், தொழில்நுட்ப ரீதியான தரமும் கொண்ட ஒரு வெற்றிப்படமாக தன்னை நிலைநிறுத்துகிறது.
ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ். இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் புதிய பரிமாணத்தில் அவர் திரையில் வெடித்திருக்கிறார். சாதாரண கதாநாயகி என்ற வரம்பை உடைத்து, கதையின் மையமாக நின்று முழு படத்தையும் தன்னுடைய ஆற்றலால் தாங்கியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டிய துணிச்சலும் உடல் மொழியும் ஆச்சரியப்பட வைக்கிறது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஆக்ஷன் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு உயர்ந்திருக்கிறது.
அபிராமி பற்றி தனியாக சொல்லியே ஆக வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு இவ்வளவு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் அவரை பார்க்கும் அனுபவம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைகிறது. குடும்ப பாசம், பயம், கோபம், தைரியம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் அவர் வெளிப்படுத்தும் ஆற்றல் கைதட்ட வைக்கிறது.
இந்த படத்தின் மிகப்பெரிய தூண் யார் என்றால் அது சண்டை பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபு தான். “பிளாஸ்ட்” படத்தின் ஒவ்வொரு சண்டை காட்சியும் வெறும் ஆக்ஷனாக இல்லாமல், கதையை நகர்த்தும் ஒரு மொழியாக மாறியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஃபைட் சீன்கள், ரியலிஸ்டிக் மூவ்மென்ட்ஸ் மற்றும் திரைக்கதையோடு கலந்த அதிரடி அமைப்புகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த ஆக்ஷன் வடிவமைப்புகளில் இதுவும் ஒன்று என்று தாராளமாக சொல்லலாம்.

திரைக்கதை இந்த படத்தின் இன்னொரு ஹீரோ. முதல் பாதியில் கதாபாத்திரங்களை அமைதியாக கட்டியெழுப்பி, இரண்டாம் பாதியில் முழு வேகத்தில் வெடிக்கும் விதமாக கதை நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் வரும் திருப்பங்கள் மற்றும் உணர்ச்சி கலந்த ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை முழுமையாக ஈர்க்கின்றன.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் பலத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் அவர் கொடுத்திருக்கும் இசை அதிர்வை உருவாக்குகிறது. சில காட்சிகளில் பின்னணி இசை திரையரங்கையே அதிர வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்ட்” வெறும் ஆக்ஷன் படம் அல்ல. குடும்ப பாசம், பெண்களின் தைரியம், சமூக பொறுப்பு, நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை விறுவிறுப்பான திரைக்கதையோடு இணைத்து ரசிகர்களுக்கு முழுமையான திரை அனுபவமாக கொடுத்திருக்கிறது.
பெண்களை சிங்கப்பெண்களாக சித்தரித்திருக்கும் படம் பிளாஸ்ட்









