‘பொம்மை’ – விமர்சனம்
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொம்மை. இப்படத்தை ராதா மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.இதற்கு முன்னர் ‘மான்ஸ்டர்’ என்கிற திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். பொம்மை மீது மனிதன் காதல் கொண்டால் என்ன ஆகும் என்பதை மையமாக வைத்து தான் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இத்திரைப்படம் ஜுன்16-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை உள்ளது. காட்சிகள் மற்றும் டயலாக்குகளும் பழசாக உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் கடின உழைப்பும், முயற்சியும் வீணடிக்கப்பட்டுள்ளது. ஒரே பிஜிஎம்-ஐ வைத்து யுவன் படம் முழுக்க ஓட்டி இருக்கிறார்.
காதல் காட்சிகள் கூட படத்தில் சரியாக ஒட்டவில்லை.யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடல்கள் ஒலிப்பது வீணடிக்கப்பட்டுள்ளது.
பொம்மை ஃபேக்டரியில் பெயிண்ட் அடிப்பவராக வேலை செய்கிறார் ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா). சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்.
ஃபேக்டரிக்கு வரும் பொம்மை ஒன்று தன் பள்ளி காலத்து காதலியான நந்தினியை(ப்ரியா பவானிசங்கர்) ராஜுவுக்கு நினைவூட்டுகிறது. இதையடுத்து கற்பனையில் அந்த பொம்மையை காதலித்து தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார். பொம்மையை நிஜம் என நினைக்கிறார்.
அந்த பொம்மையை மட்டும் விற்பனை செய்ய வேண்டாம் என ஃபேக்டரி சூப்பர்வைசரிடம் கூறுகிறார் ராஜு. இந்நிலையில் அவர் ஊருக்கு சென்ற நேரத்தில் நந்தினி போன்று இருக்கும் பொம்மை சென்னையில் இருக்கும் ஷோரூம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊரில் இருந்து திரும்பி வந்த ராஜு, நந்தினி போன்று இருக்கும் பொம்மையை காணவில்லை என்றதும் கோபத்தின் உச்சிக்கே சென்று கொலைகாரராக மாறிவிடுகிறார். இதையடுத்து நந்தினி பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார். தான் நினைத்த வாழ்க்கையை அந்த பொம்மையுடன் சந்தோஷமாக வாழத் துவங்குகிறார்.
ராஜுவின் சந்தோஷம் நிலைக்குமா, கொலை வழக்கில் போலீசாரிடம் சிக்குவாரா என்பதே கதை.
ஒரு ஆண், பொம்மை இடையேயான காதலா, இது வித்தியாசமாக இருக்கிறதே என முதலில் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. ஆனால் படம் செல்லச் செல்ல அந்த உற்சாகம் குறைந்துவிடுகிறது.
ஹீரோ, பொம்மை இடையேயான காதலில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் ராதாமோகன்.
படத்தின் இரண்டாம் பாதியில், பொம்மையுடன் நேரம் செலவிட விரும்பி அது விற்பனை செய்யப்பட்ட ஷோரூமில் வேலைக்கு சேர்கிறார் ராஜு. வாலிபர், பொம்மை இடையேயான காதலை காட்டுவதில் தவறு இல்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, டூயட் எல்லாம் பாடும்போடு தியேட்டரில் இருப்பவர்களுக்கு பொறுமை போய்விடுகிறது.
மனநல பிரச்சனைகளுடன் இருப்பவராக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார். ப்ரியாவுடன் சேர்ந்து படத்தை தன் தோள்களில் தாங்குகிறார். அழகான பொம்மையாக வந்து கவர்ந்திருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். இன்னொரு ஹீரோயினான சாந்தினிக்கு பெரிதாக வேலை இல்லை.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசுவதை நம்மால் எளிதில் கணிக்க முடிகிறது. மேலும் அடுத்து என்ன காட்சி என்பதையும் கணிக்க முடிகிறது. திரைக்கதையில் வலுவில்லை. பொம்மை படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது.
முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காததை செய்திருக்கிறார் ராதாமோகன்.
மனநல பாதிக்கப்பட்ட இளைஞனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பது வேஸ்ட்.
மொத்தத்தில் இந்த பொம்மை, பெண்மை அல்ல வெறும் பொம்மையே..!