அழகிய கண்ணே – விமர்சனம்
இயக்குநராக முயற்சி செய்து வரும் இன்பா(லியோ சிவகுமார்) திண்டுக்கல் அருகே இருக்கும் சிறு ஊரில் வசித்து வருவதை காட்டுகிறார்கள். அவர் நாடகம் எழுதுவதும், மேடை நாடகங்கள் நடத்துவதுமாக இருக்கிறார். அவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் கஸ்தூரிக்கு(சஞ்சிதா ஷெட்டி) இன்பா மீது காதல் வருகிறது.
இயக்குநர் பிரபு சாலமனிடம் வேலை செய்யும் வாய்ப்பு இன்பாவுக்கு கிடைக்கிறது. இதையடுத்து அவர் தன் மனைவியுடன் சென்னைக்கு செல்கிறார். சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார் கஸ்தூரி.
அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது கஸ்தூரி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இன்பாவை பழிவாங்க முடிவு செய்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
ஹீரோ இன்பாவுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தே வில்லன் வருகிறார். கதையில் புதுமை இல்லை. முக்கிய கதாபாத்திரங்களோடு ஒன்றுவது கடினமாக இருக்கிறது. சஞ்சிதா ஷெட்டியின் கதாபாத்திரம் மெச்சூரானது. இதுவரை அவரை பார்த்ததற்கும் இந்த படத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் தெரிகிறது.
படத்தில் சில ஃபீல் குட் தருணங்கள் இருக்கிறது. கஸ்தூரியின் குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் மூதாட்டி, அவருக்கும், குழந்தைக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் அழகாக இருக்கிறது. அந்த காட்சிகளை பார்க்கும்போது பெற்றோர் ஏன் குழந்தைகளுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்பது புரிகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் பாரதி கண்ணம்மா படத்தை ஞாபகப்படுத்துகிறது.அதுமட்டுமல்லாமல் இன்னுமா இப்படி இருக்கிறார்கள் என்றும் நம்மை நினைக்க வைக்கிறது.

தெள்ளத் தெளிவான இந்த திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.