சென்னை, செப்டம்பர் – 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- வழங்கப்பட்டது.
அகரம் ஃபவுன்டேஷன் பொருளாளர் நடிகர் கார்த்தி பேசியதாவது, அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூக குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும். இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம். இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4750 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை வழங்கி இருக்கிறது. சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். அகரம் தொடங்கப்பட்ட பொழுதும்; விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம். கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்.
2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளிலும் நிகழ்ந்த அசாதாரண சூழல் விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. ஊரடங்கு நடைமுறைகளால் வேலைக்கு சென்று தினக்கூலி பெறமுடியாத குடும்பங்களுக்கு இணைய வழி கல்வி கூடுதல் சுமையை உருவாக்கியது. 40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்த குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகள் நடத்திட இயலவில்லை. இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.
1. பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பயின்று வந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்களை அடையாளம் கண்டு ரூ.10,000/- மதிப்புள்ள ‘ஸ்மார்ட் போன்’ டிசம்பர் 2020-இல் வழங்கினோம்.
2. தனியார் கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த, பொருளாதார இழப்பால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10,000/- தலா ஒருவர் என 4000 குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணங்களை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்திற்கு செலுத்தினோம்.
3. 2020, 2021, 2022 ஆண்டுகளில் முறையே 556, 658, 560 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை ஒத்த கருத்துடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அகரம் விதைத் திட்டத்தின் வாயிலாக உருவாக்கினோம்.
ஊரடங்கு காலம், நோய் அச்சம் இயல்பு வாழ்வை புரட்டி போட்டிருந்த சூழலிலும் அகரம் தன்னார்வலர்கள் மேற்கண்ட பணிகளை தொடர்ந்திருந்தனர். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது. கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் நமது பள்ளி பெல்லோஷிப் திட்டத்தை’ திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராம பள்ளிகளில் தொடங்கி இருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களிலும் தொடக்கப்பள்ளியில் இருந்தாலும் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். அகரம் முன்னாள் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் கடினமான, சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். என்று கூறினார்.









