‘மெய்ப்பட செய்’ விமர்சனம்
நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு துணையாக நாயகனின் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள்.
சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். பிரச்சினையில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள் பிறகு அதை எதிர்த்து நின்று போராடுவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘மெய்ப்பட செய்’.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, முதல் படம் போல் இல்லாமல் காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அனைத்திலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக வலம் வந்தாலும், இறுதியில் நல்லவனாக மாறிவிடுகிறார். திடமான உடம்போடு வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.
கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன், நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல், காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் வேலன் தான் சொல்ல வந்த கருத்தை, கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து சொல்லியிருந்தாலும், எந்த ஒரு விஷயத்தை திணிக்காமல் நேர்த்தியாகவும், சுறுக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம், குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன? செய்ய வேண்டும் என்ற தீர்வையும் சொல்லியிருக்கிறது.
நல்ல மெசஜை நெருடல் இல்லாத காட்சி அமைப்புகளோடும், விறுவிறுப்பாக திரைக்கதையோடும் சொல்லியிருக்கும் இயக்குநர் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘மெய்ப்பட செய்’ பார்க்க வேண்டிய படம்.