இன் கார் – விமர்சனம்!
அஞ்சும் குரேஷி சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் “இன் கார்”. ‘இறுதிச்சுற்று’ ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ரித்திகா சிங் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

தன்னுடைய தங்கைக்காக ஒருவரை நெஞ்சில் குத்திவிட்டு ஜெயிலுக்கு சென்ற தம்பியை அவருடைய அண்ணனும், மாமாவும் அழைத்து வருகிறார்கள்; குடி, கஞ்சா, பெண்மோகம் உள்ளிட்டவற்றால் நிரம்பியிருக்கும் தம்பி தன்னுடைய இச்சைக்கு ஒரு பெண் உடனே வேண்டும் என்று அவசரப்படுத்த, ரோட்டில் நின்று கொண்டிருக்கு ரித்திகாவை கொத்தாக தூக்குகிறது அந்தகும்பல்.. அந்த கும்பலிடம் சிக்கிய ரித்திகா என்ன ஆனாள்.. அந்த கார் பயணத்தில் ரித்திகா சந்திக்கும் துன்புறுத்தல்கள் என்னென்ன? என்பதே படத்தின் கதை!

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண்ணாக நடித்திருக்கும் ரித்திகா பல இடங்களில் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். ஆண் ஓநாய்களிடம் சிக்குண்ட மானாக அவர் வெளிப்படுத்திய ராவான நடிப்பு நிச்சயம் பாராட்டுக்கு உரியது. கூடவே பயணிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சொற்பம் என்றாலும், அவையும் அந்தக்கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை நியாயமாக செய்திருக்கிறது.
இயக்குநர் ஹரிஷ்வர்தன் எவ்வித கேட்பாரன்றி பெண் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதை திரையில் அவர்கள் அனுபவிக்கும் வலியோடு சொல்ல நினைத்திருக்கிறார். அந்த முயற்சி அவருக்கு ஓரளவு கையும் கொடுத்திருக்கிறது. ஒரு கார், ரித்திகா உட்பட அதில் மொத்தமே 5 கதாபாத்திரங்கள். இதற்குள் இயக்குநர் அமைத்திருந்த திரைக்கதை நம்மை பெரும்பான்மையான இடங்களில் போரடிக்காமல் பார்த்துக்கொண்டாலும், போகிற போக்கில் அது ஒரு டாக்குமெண்ட்ரியாக மாறிப்போனது மிகப்பெரிய ஏமாற்றம்.