


உயிரே..!உறவே..!
நலமாக உள்ளேன்
நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு.
என்மீது நீங்கள் வைத்துள்ள நலவிருப்பம். அதனால் தான் நான் மீண்டுவந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து அயராது உழைத்த நம் மய்யத்தவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துகள். தொடர்ந்து செய்யுங்கள்.
உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இருந்துவிடாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
என்னுடைய வாழ்த்துகளும் கூட.
உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேலையை பாருங்கள். எப்படி இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இதை நீங்கள் செய்யவேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம். நீங்கள் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது எல்லா விதமான ஆயத்தங்களும், அதாவது இந்தத் தொற்றுக்கு எதிரான தற்காப்புகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த தொற்று நீங்கிவிட்டது அல்லது போய்விடும் என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.
நம்முடைய பலம், நம் தொண்டர்கள் தான். அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம்.
நாளை நமதே!
– தலைவர் கமல் ஹாசன்