மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு நம் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 25-ஆம் தேதி ‘லெனின் பாண்டியன்’ திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களையும், திரையரங்கு நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், படத்தின் கதாநாயகன் தர்ஷன் கணேசன் புரமோஷன் பணிகளுக்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
மதுரையில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய தர்ஷன் கணேசன், “சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நான் முதன்முதலாக நடித்து வெளிவரும் ‘லெனின் பாண்டியன்’ இந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. அதன் புரமோஷனுக்காக முதல்வெளியூர் பயணமாக மதுரை வந்தேன். மதுரை ஊர், அந்த மக்கள், அந்த வரவேற்பு எல்லாமே பிரமாதமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
தன்னை சந்தித்த பலரும் தனது குடும்பத்தின் பல தலைமுறையினருடனான தங்களது பழைய தொடர்புகளை நினைவுகூர்ந்து பேசியதாகவும் தர்ஷன் தெரிவித்துள்ளார். “தம்பி, உங்கள் தாத்தாவோடு இருந்தோம், உங்கள் அப்பாவோடு இருந்தோம், சித்தப்பாவோடு இருந்தோம், அண்ணனோடும் இருந்தோம்… இனி உங்களோடும் கண்டிப்பாக இருப்போம்” என்று பலர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சிலர் தன்னை பார்த்தவுடன் “அப்படியே ஐயாவைப் பார்த்த மாதிரி இருக்கீங்க” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
‘லெனின் பாண்டியன்’ படத்தில் தர்ஷன் கணேசனுடன் பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு, பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
T.G. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். D.D. பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு A.M. எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் இராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தளபதி தினேஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். அதூரி ஜெய்குமார் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
இந்நிலையில், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தர்ஷன் கணேசனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக சிவாஜி கணேசன் குடும்பத்தின் அடுத்த தலைமுறை நடிகராக தர்ஷன் மீது ரசிகர்கள் காட்டியிருக்கும் அன்பும், அவருடன் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட விதமும் கவனம் பெற்றுள்ளது.









