சென்னை: “கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும்” என்று மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளது மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.
பொதுவாக விஜயசேதுபதி முழுழுக்க முழுக்க ஒரு வியாபார கலைஞனாக தன்னை ஒருபோதும் முன்னிறுத்தி கொண்டதில்லை.. அவரது பேச்சு, செயல்பாடு, கருத்துக்கள், சிந்தனை அத்தனையும் அவரை பிற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திதான் காட்டி வருகிறது.
வெகு இயல்பான அதே சமயம் சமூக அக்கறையும் கலந்து பேசுவதுதான் விஜய சேதுபதியின் ஸ்பெஷல்.. அந்த பேச்சு நேற்று மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவிலும் வெளிப்பட்டது.
விஜய் சேதுபதி
உண்மையை சொல்ல போனால், நேற்று விஜய் பேசியதைவிட, விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சற்று காரநெடியுடன் தென்பட்டது.. இந்துத்துவா வாதிகளுக்கு ஒரு பலமான சவுக்கடியையும் தந்துள்ளது. விழாவில் அவர் பேசிய 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன… அவைதான் இவை:
கொரோனா
“நான் இங்க 2 விஷயங்கள் பத்தி பேச விரும்புகிறேன்… முதல் விஷயம் கொரோனா. யாரும் பயப்படவேண்டாம்.. இது இயல்பு… இதுபோல எதாவது ஒன்னு வந்துட்டேதான் இருக்கும். ஆனால் நம் மனதை பலப்படுத்தி கொள்ளவேண்டும்.. மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேலே இருந்து எதுவும் வராது. கொரோனா வந்துடும்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச மறுக்குற நிலைமைல, பரவும்னு தெரிஞ்சும் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பாக்குற அத்தனை பேரையும் நான் வணங்குறேன்… அதனால தைரியமா எதிர்கொள்ள வேண்டும்.. என் பசங்களுக்கும் இதைதான் நான் கற்றுகுடுத்துட்டு வர்றேன்.
கடவுள்
இரண்டாவது, இன்னொரு வைரஸ் இருக்கு.. சாமிக்காக சண்டை போட்டுக்கிறவங்க.. சாமி பல கோடி வருஷமா இங்க இருக்கு.. அதை சாதாரண மனிதனால் காப்பாத்த முடியாது… கடவுள் மேல இருக்கான்… மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். மதம் அவசியம் இல்லாதது… நம்புங்க ப்ளீஸ்.
மனித நேயம்
மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம மனிதத்தை மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும். கடவுள் எல்லாம் நம்மை காப்பாத்தாது. மனுஷங்கள நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்” என்றதும் அப்ளாஸ் அரங்கையே குலுங்க வைத்தது!!
அப்ளாஸ் பேச்சு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வையும், மதவெறி எதிர்ப்பையும் ஒன்றுசேர்த்து விஜய் சேதுபதி பேசியதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.. இவர் சொன்ன இந்த 2 விஷயமும் தற்கால அரசியலுக்கும், உலக சூழலுக்கும் மிக மிக இன்றியமையான ஒன்றாகும்.. கட்டாயம் நாம் பின்பற்றக் கூடியதுமாகும்!