தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் இந்தாண்டு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வது நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
2018ம் ஆண்டில் 175 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், அதில் ஒரு 10 முதல் 15 திரைப்படங்கள் தான் வெற்றிப் படங்களாக அமைந்தன.
ஆண்டு தொடக்கத்தில் மூன்று தோல்வி படங்கள் வந்த நிலையில், ஆண்டு இறுதியில் தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் ரிலீசாகி தமிழ் சினிமாவை மீண்டும் தலை தூக்கச் செய்தன.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ரஜினியின் காலா மற்றும் 2.0 திரைப்படம் ஒரே ஆண்டில் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்த இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஆதிக்கம் செலுத்தின.
காலா படம் தமிழகத்தில் 70 கோடி ரூபாய் வரை வசூலையும் இந்திய அளவில் 130 கோடி வரை வசூலையும் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான 2.0 திரைப்படம் ஆயிரம் கோடிகளை நெருங்கும் முதல் கோலிவுட் படைப்பாக மாறியுள்ளது. சீனாவில் வரும் மே மாதம் படம் ரிலீசானால் மேலும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் இந்தாண்டு சூப்பர்ஸ்டார் ரஜினி தான் வசூல் நாயகனாக முதலிடம் பிடிக்கிறார்.
அதற்கடுத்த இரண்டாம் இடத்தை நடிகர் விஜய் சர்கார் படத்தின் மூலம் பிடித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 125 கோடி வரை சர்கார் வசூலித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் 65 கோடி ரூபாயையும், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படங்கள் தலா 50 கோடி ரூபாயும் வசூலை ஈட்டியுள்ளன.
மேலும், டிக் டிக் டிக், கனா, அடங்கமறு, இரும்புத்திரை, கலகலப்பு2, இருட்டறையில் முரட்டுக் குத்து, செக்கச்சிவந்த வானம், வடசென்னை, 96 மற்றும் ராட்சசன் படங்கள் பட்ஜெட்டை விட பல மடங்குகள் வசூலை ஈட்டி தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தரர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தின.
இந்த ஆண்டு நடிகர் விஜய்சேதுபதி, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி என தொடர்ந்து சிறப்பான நடிப்புகளை கொடுத்து இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என்ற சிறப்பு பட்டத்தை பெறுகிறார்.
நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியை நம் கண்முன்னே காட்டினார். கோலமாவு கோகிலா மற்றும் இமைக்காநொடிகள் படங்களில் நடித்த லேடி சூப்பர்ஸ்டார் இந்த ஆண்டும் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினார். 96 எனும் ஒரே படத்தில் த்ரிஷா தனது முதல் காதலை கண்களின் வழியே பலருக்கும் ஊற்றி, இன்னும் ஜானு மயக்கத்தில் இருந்து பலரையும் மீளச் செய்யாமல் உள்ளார்.
இந்த பட்டியலில் கருப்பான நடிகை என்றும் சென்னை பொண்ணு என்றும் சொல்லப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய சிக்ஸர் அடித்துள்ளார். ஹீரோக்களே மிரளும் வண்ணம் அசால்ட்டாக கெட்டவார்த்தை பேசும் பத்மாவாகவும், கண்களில் கனவையும் உள்ளத்தில் தந்தையையும் அவரது துயரத்தையும் சுமந்து ஜெயிச்சுட்டு பேசு எனும் வார்த்தைக்காக காத்திருந்து மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கி உலகிற்கே விவசாயத்தின் முக்கியத்துவத்தை கூறும் கெளசல்யா முருகேசன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து முதலிடம் பிடிக்கிறார்.
இவர்களை தவிற இந்த ஆண்டு பல படங்களில் வில்லியாக வலம் வந்து மிரட்டிய வரலட்சுமி சரத்குமார், சமந்தா, ஆண்ட்ரியா, நிவேதா பெத்துராஜ் என பல நடிகைகளும் தங்களுடைய சிறப்பான நடிப்பை இந்த ஆண்டு வெளிகாட்டியுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த படம் எதுவென்றால் அது நிச்சயம் பரியேறும் பெருமாள் தான். சாதி வெறியை மாரி செல்வராஜ் அத்துனை திரைமொழியில் ஆணி அறைந்தது போல காண்பித்து பலரது மனங்களையும் வென்றுள்ளார்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என இரு பெரும் படங்களுடன் தொடங்கும் 2019ம் ஆண்டிலும் பல பெரிய படங்கள் வரிசைக் கட்டி காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!